சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் இலக்கல்ல, இந்தியாவை வீழ்த்துவதும்தான்: பாக்...
விருதுநகர்: மருத்துவர்கள் பற்றாக்குறை; சேவைக் குறைபாடு புகார்கள்... திடீர் விசிட் அடித்த ஆட்சியர்!
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அரசு மகப்பேறு மருத்துவமனை பிரதான சாலையில் உள்ளது. அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு சாத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளதென தொடர் புகார்கள் வந்தது. மேலும், அவசர காலத்தில் நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் ஆம்புலன்ஸ் வசதியோ, பாதுகாப்புக்கு இரவு காவலரும் கிடையாது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/hbqluz5f/IMG-20250207-WA0020.jpg)
இதுதவிர பணியில் இருக்கும் மருத்துவர்களும் சரியான முறையில் சிகிச்சை அளிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், சாத்தூர் சென்ற விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சாத்தூர் பிரதான சாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அரசு மருத்துவமனை வாயில் பூட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து, அதிகாரிகள் வந்திருப்பதை அறிந்து மருத்துவமனையின் பூட்டை திறந்து வெளியே செவலியர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, மருத்துவமனை உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், மருத்துவமனையில் இரவு நேரத்தில் மருத்துவர்களோ, காவலர்களோ ஏன் பணியில் இல்லை என கேட்டறிந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/lzzdwakt/IMG20250207204907.jpg)
தொடர்ந்து, மருத்துவமனை மருந்து இருப்பு விவரம், சிகிச்சை பெறும் நோயாளிகள், சுகாதாரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்திய ஆட்சியர், இரவு நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர் பணியில் இல்லாதது குறித்து சாத்தூர் தலைமை மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் விரிவான விசாரணை நடத்துமாறு அதககாரிகளுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து, சாத்தூர் அரசு தலைமை மருத்துவர் முனிசாயிகேசன் மற்றும் மருத்துவர்கள் சுகாதாரத்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.