செய்திகள் :

அம்பேத்கரை அறிவோம்: `அறிவில் சிறந்த அண்ணல்' - கல்வியும் அம்பேத்கரும்

post image
`கல்வி இல்லாமைதான் ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கிறது' என்பதை ஆணித்தரமாக 19-ம் நூற்றாண்டில் வெளிப்படுத்தியவர் மகாத்மா ஜோதிராவ் பூலே.

கல்வி என்பது ஓர் அரசியல். கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கினால் அது மக்களை அதிகாரப்படுத்தும் அரசியல். கல்வி மறுத்தால் அது மக்களைப் பலவீனப்படுத்தும் அரசியல். கல்வி கற்ற சமூகத்தில் ஜனநாயகம் வலுவாக இருக்கும். ஜனநாயகம் வலுவாக இருந்தால், தனி மனித சுதந்திரம் காக்கப்படும். கல்வி, ஜனநாயகம், சுதந்திரம் மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இந்திய நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பெரும் பகுதி மக்கள் கல்வியை முழுமையாக பெறும் வாய்ப்பை இழந்து, அறியாமையில் இருந்தனர்.

``சமூக அடுக்கில் அவரவர் எந்த அடுக்கில் பிறந்தனரோ, அவர்கள் பிறப்பின் அடிப்படையில் வேலைக்கான வாய்ப்பு, தான் செய்ய வேண்டிய வேலைக்கு எந்த வகையான திறன் தேவையோ அதை மட்டுமே பயின்றால் போதுமானது. அதற்கு மேல் வேறு எதையும் பயில விருப்பம் கொள்ளக்கூடாது. சமூகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த ஒரு சிறு கூட்டம், தான் மட்டுமே அனைத்துக் கலைகளையும் பயிலவும் முடியும், அனைத்து கலைகளையும் கற்றுத் தரவும் முடியும், ஆனால், அவரவர் பிறப்பின் அடிப்படையில் எதை கற்றுத் தர வேண்டுமோ அதை மட்டுமே கற்றுத் தருவோம்" என்று பிரகடனப்படுத்தி அதைச் செயல்படுத்தி வந்தனர்.

அம்பேத்கர்

அவ்வாறுதான், பிறப்பின் ரகசியம் வெளிப்பட்டவுடன், கற்ற குறிப்பிட்ட வித்தையைப் பயன்படுத்த வேண்டிய நேரத்தில் மறந்துபோக சபிக்கப்பட்டார் கர்ணன். இத்தகைய ஜனநாயகமற்ற கல்விச் சூழலை நவ நாகரிக உலகம் ஏற்காது. எனவே, நவ நாகரிக உலகிற்கு ஏற்ப சூழ்ச்சிகளை வடிவமைக்கத் தொடங்கினர். இதை எதிர்த்து பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த போராட்டக் களத்தில் நம்பிக்கைச் சூரியனாக 20-ம் நூற்றாண்டில் விளங்கியவர்தான் அண்ணல் அம்பேத்கர். பாபாசாககேப் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் கல்வி குறித்த நுட்பமான பார்வைக் கொண்டவர். அவரின் அறிவுத் திறன் அவரின் சட்டமன்ற உரைகளில் நான்கு வெளிவிடப்பட்டது.

பம்பாயில் (அன்றைய பாம்பே) மாகாண சட்ட மேலவையில் பம்பாய் பல்கலைக்கழக மசோதா விவாதிக்கப்படுகிறது. அந்த விவாதத்தில் பங்கேற்று பேசுகையில் கல்வியின் பொருள், கல்வியின் நோக்கம், கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் கல்விக் கூடங்களும், அரசும் செய்ய வேண்டியது என்னென்ன என்பனவற்றை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். இந்தியாவின் முன்னணி கல்வியாளர்கள் சிந்திக்கத் தவறிய பல உண்மைகளை வெளிப்படுத்தினார். மிகவும் குறிப்பாக கல்விக்கும் தேர்விற்கும் அவர் தந்த விளக்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வாய்ப்பிருந்தால் கற்கலாம். கற்றதை வெளிப்படுத்தும் திறன்களை உருவாக்கிக் கொள்ளலாம். அத்தகைய வாய்ப்பு பெற்று, கற்றறிந்தவர்கள் எந்த அளவு கற்க முடிந்தது என்பதை தேர்வின் மூலம் மதிப்பிடலாம்.

அம்பேத்கர்

ஆக கற்றல் நிகழ்ந்தால்தான், மதிப்பிட முடியும். இங்கு கற்றலுக்கான வாய்ப்புகளை உருவாக்கி, இதுவரை அத்தகைய செயல்பாட்டிற்கு அறிமுகமே இல்லாதவர்களை ஈர்த்து, அவர்களின் கல்விக்கான சூழலை வலுப்படுத்த வேண்டும். அதை செய்யாமல் தேர்வுகளை மட்டுமே கடினப்படுத்தினால் எப்படி கற்றல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க முடியும்? 1927ம் ஆண்டு ஜூலை 27 அன்று அன்றைய பாம்பே சட்டமேலவையில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையில்,'' "தேர்வும் கல்வியும் வெவ்வேறானது, ஆனால் அவர்கள் கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில், இதுவரை பல்கலைக் கழக வளாகத்திற்குள் கால் வைக்க முடியாமல் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இனி என்றுமே உள்ளே நுழைய முடியாத அளவு தேர்வுகளை மிகவும் கடினமானதாக்கிவிடுகின்றனர்" எனக் குறிப்பிடுகிறார்.

அன்றைய கல்வியாளர்கள் மீது அண்ணல் அம்பேத்கர் வைத்த விமர்சனம் இன்றைக்கும் பொருந்தும். அன்றைய ஆட்சியாளர்களிடம், கல்விக்கான உதவித் தொகை வழங்காமல் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய சமூக மக்கள் எவ்வாறு உயர் கல்வி பெற முடியும் என்ற கேள்வியை எழுப்பும்போது, மிகவும் நுணுக்கமாக ஒரு கருத்தை முன்வைக்கிறார்.

அம்பேத்கர்
நம் மாணவர்களைப் பார்த்து கலை மற்றும் சட்டப் படிப்பைப் படிக்கச் சொல்கிறார்கள். நம் மாணவர்கள் ஏன் கணிதமும், அறிவியலும் பயிலக் கூடாது. கணிதமும் அறிவியலும் பயிலாமல் வாழ்க்கையில் எப்படி முன்னேற முடியும்? நம் மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் துறையில் உயர் கல்வி பெற வேண்டும். அது அரசின் உதவி இல்லாமல் சாத்தியப்படாது என்று தெளிவுபட கூறினார்.

அரசின் பொறுப்பிலும் செலவிலும் கல்வி அனைத்து நிலையிலும் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்பதே பாபா சாகேப் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்களின் பெரும் விருப்பம். அரசு கல்வி நிறுவனங்கள் மூலம்தான் கண்ணியமிக்க மாணவப் பருவத்தை உறுதிசெய்ய முடியும். சமமான கற்றல் வாய்ப்பும் உத்தரவாதப்படுத்த முடியும். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எப்படி எல்லாம் சவால்களை சந்தித்தார் என்பதை அறிந்த நாம், நமக்கான கல்வி குறித்து அவர் எழுதியதையும், பேசியதையும் இன்னும் படிக்காமலேயே இருப்பது மிகப் பெரும் குற்றம் என்று நாம் உணர வேண்டாமா? இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கல்வியாளர்களில் முதன்மையானவர் பாபா சாகேப் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் என்றால் அது மிகையல்ல. ஆதாரப்பூர்வமான உண்மை.

`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூலை வாங்குவதற்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் - எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்

`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்'

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் 18 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் (MAHER) நேற்று (16.12.2024) தன் 18 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவை எனாத்தூர், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்... மேலும் பார்க்க

Auditor: 'ஆடிட்டர்' ஆக வேண்டுமா? என்ன படிக்கலாம்? எங்குப் படிக்கலாம்? முழு விவரம்!

பெரிய நிறுவனங்களில் 'ஆடிட்டர்' என்ற வார்த்தையை அடிக்கடி நாம் அதிகம் கேட்டிருப்போம். மேலும், இன்று பல மாணவர்களுக்கு ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்கு என்ன படிக்க வேண்டும்... எப்படி தயாராக வேண... மேலும் பார்க்க

'முழு கல்விக் கட்டணம் டு லேப்டாப்' - பெடரல் வங்கி வழங்கும் உதவித்தொகை - யார் யார் விண்ணப்பிக்கலாம்?!

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பெடரல் வங்கி தங்களது நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் நினைவாக 'பெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு உதவித்தொகை 2024-25' வழங்க விண்ணப்பங்களை கோரியுள்ளது.யார் யார் விண்ணப்பிக்கலாம்?எம்.பி.பி.எஸ... மேலும் பார்க்க