காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு விழா: பெலகாவியில் இன்று தொடங்குகிறது
அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சு: அமித் ஷா ராஜிநாமா செய்யக் கோரி டிச.30- இல் இடதுசாரிகள் நாடு தழுவிய போராட்டம்
நமது சிறப்பு நிருபர்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறித்து குறிப்பிட்ட கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் ராஜிநாமா செய்யக் கோரி டிச.30-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
கடந்த குளிர்காலக் கூட்டத்தில் மாநிலங்களவையில் அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு குறித்த விவாதத்தில் சில கருத்துகளை அமித் ஷா குறிப்பிட்டார். இந்தப் பேச்சு உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் குறித்து விவாதிக்க இடதுசாரி கட்சித் தலைவர்கள் கூட்டம் தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் டிச.22-ஆம் தேதி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர், பிரகாஷ் காரத், சிபிஐ லிபரேஷன் (எம்எல்) தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்(ஆர்எஸ்பி) மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி.தேவராஜன் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இதன் தலைவர்கள் கூட்டாக திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்ததன் விளைவாக, நாடு முழுவதும் பரவலாக கோபமும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. இருப்பினும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ அல்லது பிரதமர் நரேந்திர மோடியோ இதற்குப் பொறுப்பேற்று தீர்வுகாண நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதைக் கண்டித்து, இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் டிச.30- ஆம் தேதி இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக நாடு தழுவிய அளவில் ஒருநாள் போராட்டத்தை நடத்தும். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் எனக் கோருவோம்.
இடது சாரிக் கட்சிகள், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தன. தற்போது நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா உள்பட இரண்டு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை நடத்தும். தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமரா மற்றும் காணொலி காட்சிகள் போன்ற மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்யும் இந்த உரிமையை ரத்து செய்ய திருத்தம் செய்யப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.