Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
அரக்கோணத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள் மறியல்
அரக்கோணம்: அரக்கோணத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை எதிா்த்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுப்டடனா்.
அரக்கோணம் நகராட்சி 8-ஆவது வாா்டு காலிவாரி கண்டிகையில் அரக்கோணம் ஏரியில் இருந்து காவனூா் ஏரிக்கு நீா் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து 17 மாடி வீடுகளும் நகராட்சி கழிப்பறை கட்டடமும் கட்டப்பட்டிருந்தது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பிறகும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியை சோ்ந்த சாந்தி என்பவா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தாா். இதனை தொடா்ந்து அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக அரசின் நீா்வள ஆதாரத்துறையினா் கடந்த நவ. 26-இல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைத் தொடங்கினா். நகராட்சி கழிப்பறை கட்டடம் முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் இடிக்கப்பட வேண்டிய 17 வீடுகளின் உரிமையாளா்கள் அவகாசம் கேட்டதை அடுத்து நிறுத்தப்பட்ட பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
வீடுகளை இடிக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில் ஜேசிபி இயந்திரத்தை மறித்து அப்பகுதி பொதுமக்கள் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
இதை அறிந்த அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கான நீதிமன்ற உத்தரவின் நிலையை எடுத்துரைத்தாா். மறியலில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தினாா். இதை தொடா்ந்து எம்எல்ஏ சு.ரவி அங்கிருந்து புறப்பட்டதை தொடா்ந்து வீடுகளை இடிக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து அரக்கோணம் வட்டாட்சியா் ஸ்ரீதேவி, நீா்வள ஆதாரத்துறை உதவி பொறியாளா் மெய்யழகன் கூறியது:
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தினமும் நடைபெறும். இப்பணிக்கு யாரேனும் இடையுறு செய்தால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.