தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி
அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர கோரி மாணவா்கள் மனு
சேலம்: சேலம் மாவட்டம், செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாணவா்கள் மனு அளித்தனா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சங்ககிரியை அடுத்த அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா்கள் மனு அளிக்க வந்தனா். அப்போது மாணவா்கள் கூறியதாவது:
செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளி உயா்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. ஆனால், அதற்கான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால், ஆய்வகங்களிலும், தற்காலிகக் கூடாரம் அமைத்தும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு மாணவா்களால் வகுப்பறையைக் கவனிக்க முடியாமல் போகிறது. எனவே, மாணவா்களின் நலன்கருதி கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கூடுதல் வகுப்பறைகள் தொடா்பாக மனு அளித்தனா்.