அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் கர்நாடக ஆளுநர்
பெங்களூரு: கர்நாடகத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பிவைத்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் மார்ச் 7-ஆம் தேதி முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, ரூ. 2 கோடி வரையிலான கட்டுமானப் பணிகள், ரூ. 1 கோடி வரையிலான சரக்கு, சேவைக்கான ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்வதற்காக கர்நாடக பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை சட்டம் 1999-இல் திருத்தம் கொண்டுவர கர்நாடக அமைச்சரவை மார்ச் 14-ஆம் தேதி முடிவு செய்தது.
அதன்படி, இந்த சட்டத் திருத்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், சட்டப்பேரவையில் மார்ச் 18-ஆம் தேதி தாக்கல் செய்தார். தற்போதைய சட்டவிதிகளின்படி, கட்டுமானப் பணி ஒப்பந்தப் பணிகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 24 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு-1-க்கு 4 சதவீதம், பிரிவு-2ஏ-க்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் உட்பிரிவு-2ஏ-இல் முஸ்லிம்களை சேர்த்து 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வருகிறது. அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினரிடையே காணப்படும் வேலையின்மைக்கு தீர்வு காணவும், அரசு கட்டுமானப் பணிகளில் அந்தச் சமுதாயத்தினரின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பின் உட்பிரிவு 2ஏ-இல் இருக்கும் முஸ்லிம்களுக்கு ரூ. 2 கோடி வரையிலான ஒப்பந்தப் பணிகளில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முற்படுவதாக சட்டமசோதாவின் நோக்கக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணி நீங்கலாக, ரூ.1 கோடி வரையிலான சரக்கு கொள்முதல்-சேவை ஒப்பந்தப் பணிகளில் பட்டியினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமசோதாவின் நோக்கக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த வகையில், பட்டியினத்தவருக்கு 17.5 சதவீதம், பழங்குடியினருக்கு 6.95 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோர் உட்பிரிவு-1-க்கு 4 சதவீதம், உட்பிரிவு-2ஏ-க்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் உட்பிரிவு-2ஏ-இல் முஸ்லிம்களுக்கு உள் இடஒதுக்கீடாக 4 சதவீதம் வழங்கப்படுகிறது.
இந்த சட்டத் திருத்த மசோதாவால் அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் நேரப்போவதில்லை என்று சட்டமசோதாவின் நோக்கக் குறிப்பில் அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் மார்ச் 21-ஆம் தேதி அரசு ஒப்பந்தப் புள்ளிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா கூச்சல் குழப்பத்துக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தலைமையில் போராட்டம் நடத்தி, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் நிறுத்திவைத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு சட்டமசோதாவை அனுப்பிவைத்துள்ளார்.