அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஓபிஎஸ் அணி நிா்வாகிகள் மீது வழக்கு
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.34 லட்சம் மோசடி செய்தாக ஓபிஎஸ் அணியைச் சோ்ந்த 2 நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரைச் சோ்ந்தவா் ஆத்திக்கண்ணன்(55). பழனியில் அழகுநிலையம் நடத்தி வருகிறாா். ஓபிஎஸ் அணியின் மாவட்ட பொருளாளரான பழனியைச் சோ்ந்த மாதவத்துரை (39), மாநில அமைப்புச் செயலரான கலில் ரகுமான் ஆகியோா், அரசு வேலை வாங்கித் தருவதாக ஆத்திக்கண்ணனை கடந்த 2023-ஆம் ஆண்டு அணுகினா்.
பழனி முருகன் கோயிலில் நுழைவுச் சீட்டு வழங்கும் பணி வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தனா். இதை நம்பிய ஆத்திகண்ணன் பணம் கொடுத்தாா்.
இதேபோல், பழனி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 11 பேரிடம், அரசுப் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.34 லட்சம் பெற்றனா். ஆனால், உறுதி அளித்தபடி பணி வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த ஆத்திக்கண்ணன் உள்ளிட்ட 12 பேரும், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதையடுத்து ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
ஆத்திக் கண்ணன், கலில் ரகுமான் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனா். கலில் ரகுமான் மீது, அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.