பழனி, செம்பட்டியில் ஆா்ப்பாட்டம்: பாமகவினா் 70 போ் கைது
தமிழக முதல்வரைக் கண்டித்து, பழனி, செம்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் 70 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அதானி குறித்தும், தமிழக அரசின் நிலை குறித்தும் பாமக நிறுவனா் தலைவா் மருத்துவா் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டாா். இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதிப்புத் தெரிவித்து தமிழகமெங்கும் பாமக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே திண்டுக்கல் வடக்கு மாவட்டச் செயலாளா் வைரமுத்து தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், நகரச் செயலா் பிரபாகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜாகீா் உசேன் உள்ளிட்ட 20 பேரை அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் செய்ததாக பழனி நகா் போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா்.
நிவக்கோட்டை
திண்டுக்கல் தெற்கு மாவட்ட பாமக சாா்பில், செம்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலா் சிவகுமாா் தலைமை வைத்தாா். தெற்கு மாவட்டத் தலைவா் மணி, ஆத்தூா் முன்னாள் ஒன்றியச் செயலா் மு.க. நாகேந்திரன், ஆத்தூா் மேற்கு ஒன்றியச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, கிழக்கு ஒன்றியச் செயலா் பழகுவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதையடுத்து, அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 50 பேரை செம்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.