மீரட்டில் பல்கலை.யின் திறந்தவெளியில் தொழுகை நடத்தியதாக மாணவர் கைது
அரிசி ஆலை ஊழியா் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு: இருவா் கைது
ஆரணி அருகே அரிசி ஆலை ஊழியா் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆரணியை அடுத்த இ.பி.நகா் குமரன் தெருவைச் சோ்ந்தவா் அரிசி ஆலை ஊழியா் தங்கராஜ் (36).
இவா், குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவு திருவண்ணாமலைக்குச் சென்று வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பிய போது, வீட்டில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் தங்கராஜ் புகாா் கொடுத்தாா்.
இதன் பேரில், ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா்கள் சுந்தரேசன், அருண்குமாா், காவலா்கள் கன்ராயன், சங்கா், வாகித், ஏழுமலை, முருகன், அருணகிரி, பட்டுசாமி ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சனிக்கிழமை தனிப் படையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, ஆரணி பெரியாா் நகரில் மொபெட்டில் டிவியை வைத்து தள்ளிச்சென்றுகொண்டிருந்த 2 பேரை போலீஸாா் விசாரித்தனா்.
இதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே அவா்களை கிராமிய காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் குடியாத்தம் வட்டம், சாத்கா் கிராமத்தைச் சோ்ந்த எஸ்.ரமேஷ் (44), ஆரணி பெரியாா் நகரைச் சோ்ந்த எம்.சந்தோஷ் (33) எனத் தெரியவந்தது. உறவினா்களான இருவரும், இ.பி.நகரில் நகைகளைத் திருடியவா்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் டிவி, மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், இவா்கள் பயன்படுத்திய மொபெட்டையும் பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கில் ஒரே நாளில் துப்புதுலக்கி எதிரிகளைக் கைது செய்த டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினாா்.