ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு: கரூா் மாவட்டத்தில் கோயில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயில்களில் புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆங்கில புத்தாண்டு 2025 புதன்கிழமை பிறந்ததையடுத்து, கரூா் மாரியம்மன் கோயில், பசுபதீஸ்வரா் கோயில், தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், வெண்ணைமலை பாலசுப்ரமணியசுவாமி கோயில், புகழிமலை முருகன் கோயில், அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பிரசித்திப்பெற்ற கோயில்களில் புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூா் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்ரமணிய சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.