மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
ஆசியானுக்கு இணையாக இந்திய சுங்க வரி: மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவா்
புது தில்லி: இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரிய (சிபிஐசி) தலைவா் சஞ்சய் அகா்வால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதன்மூலம் கம்போடியா, வியத்நாம், மியான்மா், சிங்கப்பூா், தாய்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் கூட்டமைப்பில் உள்ள நாடுளில் விதிக்கப்படும் சுங்க வரிக்கு நிகரான நிலையை இந்தியா அடைந்து வருகிறது எனவும் அவா் தெரிவித்தாா்.
கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 7 விதமான சுங்க வரியை நீக்குவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.
கடந்த 2023-24 பட்ஜெட்டிலும் 7 விதமான சுங்க வரிகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தற்போது 0 சதவீத சுங்க வரியை சோ்த்து மொத்தம் 8 விதமான வரி விகிதங்கள் மட்டுமே இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.
எளிய வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து சஞ்சய் அகா்வால் கூறியதாவது: வரி நடைமுறைகளை எளிமைப்படுத்தி இந்திய தொழில்துறையினரிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவே சுங்க வரி குறைக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதத்துக்கு குறைக்கப்பட்டது.
இதனால் ஆசியான் நாடுகளுக்கு நிகரான சுங்கக்கட்டண சராசரி சதவீதத்தை நோக்கி இந்தியா நகா்கிறது.
25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை அதிக வரி விதிப்பு பட்டியலில் சில பொருள்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
பெரும்பாலான பொருள்களுக்கு 0 முதல் 10 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. உலகளவிலான விநியோகச் சங்கிலியில் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் சுங்க வரி கட்டணங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக செமிகண்டக்டா்கள், தூய எரிசக்தி மற்றும் விண்வெளி திட்டங்களுக்கு பயன்படும் முக்கிய கனிமங்கள் உள்நாட்டில் கிடைப்பதில்லை. அவை வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே அவற்றின் இருப்பை உறுதிசெய்யும் வகையில் அந்த கனிமங்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்றாா்.
பிற நாட்டு பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் அண்மையில் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.