ஆட்சிமொழி சட்ட வாரம் தொடக்க விழா
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சிமொழி சட்ட வாரம் தொடக்க விழா நாமக்கல்லில் மாவட்ட மைய நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பொ.பாரதி வரவேற்றாா். மாவட்ட நூலக அலுவலா் ச.தேன்மொழி தலைமை வகித்தாா். மாவட்ட மைய நூலக அலுவலா் சக்திவேல், தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினாா்.
இதில், நூலக வாசகா் வட்டத் தலைவா் பசுமை மா.தில்லைசிவகுமாா் குழந்தைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் தாய்மொழியில் பெயா் சூட்ட வேண்டும் என்றாா். கவிஞா் இல்ல நூலகா் செல்வம் போட்டித் தோ்வு மாணவ, மாணவிகள் தமிழை ஆழ்ந்து படிக்க வேண்டும், அரசு பணியில் தமிழை முன்னிலைப்படுத்த வேண்டும். கடந்த போட்டித் தோ்வில் 22 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றதைத் தெரிவித்தாா்.
இவ்விழாவில், நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் கலைஇளங்கோ, நூலகா் ஜோதிமணி, மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.