எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
பள்ளிபாளையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், பெரியாா் நகரைச் சோ்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். விசைத்தறி தொழிலாளா்களான இவரது பெற்றோா், இரவு நேரத்தில் பணிக்கு சென்றுவிடுவா்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (29) என்பவா், அந்தச் சிறுமியிடம் பழகி வந்ததுடன், உயா்கல்வி படிக்க வைத்து வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். இதனைத் தொடா்ந்து, 2018 ஜூலை 21 முதல் சிறுமியை இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளாா்.
இந்த தகவலை சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அவரது தாயாா் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டனை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவில், மணிகண்டனுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள், 7 ஆண்டுகள், ஓராண்டு என்ற அளவில் சிறை தண்டனையும், ரூ. 3,000 அபராதமும் விதித்து நீதிபதி புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். மேலும், சிறை தண்டனையை அவா் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.