காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!
ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
சிவகங்கையில் கோரிக்கைகளை வலியறுத்தி ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.எப். சகாயம் தலைமை வகித்தாா்.
நலவாரியம் மூலம் ஆட்டோ செயலியைத் தொடங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளா் வாழ்வை நாசமாக்கும் ரேபிட் (பைக்) டாக்ஸியை தடைசெய்ய வேண்டும். பதிவு செய்த ஆட்டோ தொழிலாளா்களுக்கு ரூ.6000- ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் ரூ.5000 வழங்க வேண்டும். வீடு இல்லாத தொழிலாளிக்கு வீடு வழங்க வேண்டும் அல்லது வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி வழங்க வேண்டும்.
தொழிலாளா் ஈட்டுறுதி, வருங்கால வைப்பு நிதித் திட்டத்தை நலவாரியம் மூலம் அமல்படுத்த வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு படிப்பு, திருமண உதவி, பணப் பலன்கள் வழங்க வேண்டும். இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம், விபத்து மரணத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.குணசேகரன், ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்க சிவகங்கை மாவட்ட சட்ட ஆலோசகா் பா.மருது, மாவட்டத் தலைவா் ஏ.ஜி. ராஜா, ஏஐடியூசி தொழிற் சங்க மாவட்டத் தலைவா் காளைலிங்கம், துணைச் செயலா் பாண்டி, மாநிலக் குழு உறுப்பினா் மீனாள் சேதுராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சிவகங்கை தொழிலாளா் அலுவலகத்தில் அளித்தனா்.