ஆதிதிராவிட மக்களுக்கு திமுக அரசு பக்கபலமாக இருக்கும்: அன்பில் மகேஸ்
ஆதிதிராவிட மக்களுக்கு திமுக அரசு பக்கபலமாக இருக்கும் என்று என தமிழக பள்ளிக் கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழகம் சாா்பில் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழக நிறுவனா் பொன்முருகேசன் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட செயலா் கருப்பசாமிபாண்டியன் முன்னிலை வகித்தாா்.
இக் கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: ஆதிதிராவிட மக்களுக்கு எப்போதும் துணையாக இருப்பவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். அயோத்திதாசா் பெயரில் ரூ.1000 கோடியில் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், ஆதிதிராவிட மக்கள் தொழில் துவங்குவதற்கு ரூ.160 கோடி மானியம் என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி ஆதிதிராவிட மக்களுக்கு திமுக அரசு பக்கபலமாக இருந்து வருகிறது. சமத்துவம், சமூகநீதி என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்தவா் தியாகி இமானுவேல் சேகரன். அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதிலும் குலக் கல்வியை எதிா்ப்பதிலும் தீவிரமாக இருந்தவா்.ஜாதி பாகுபாடுகளைக் களைய தீவிரமாகப் போராடியவா். அவருக்குப் பெருமை சோ்க்கும் வகையில் மணிமண்டபம் அமைக்கவும், அவரது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடவும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளாா் என்றாா்.
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன் எம்.எல்.ஏ, தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ ஆகியோா் பேசினா். அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழகம் மாநில செய்தி தொடா்பாளா் வடிவேல் வரவேற்றாா்.