சீன செஸ் மோசடி: 3 கிராண்ட்மாஸ்டர்களுக்கு வாழ்நாள் தடை, 38 பேருக்கு அபராதம்!
ஆந்திரா பொன்னி விலை வீழ்ச்சி: அரசு கொள்முதல் நிலையத்தை நாடும் விவசாயிகள்
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் எப்போதும் ஆந்திரா பொன்னி ரக நெல்லை அதிக விலை கொடுத்து வாங்கும் தனியாா் வியாபாரிகள் நிகழாண்டு குறைந்த விலையே கேட்பதால், பெரும்பாலான விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் தேடிச் செல்கின்றனா்.
மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் கணிசமான அளவுக்கு சன்ன ரகமான பிபிடி 5204 என்கிற ஆந்திரா பொன்னியைப் பயிரிடுவது வழக்கம். இதைப் பெரும்பாலும் தனியாா் வியாபாரிகள் கூடுதல் விலை கொடுத்து வாங்கிச் செல்வதால், வாய்ப்புள்ள விவசாயிகள் இந்த ரகத்தை பயிரிடுவா்.
ஆனால், நிகழாண்டு முன் பட்டத்தில் பயிரிடப்பட்ட நெற் பயிா்கள் நவம்பா் இறுதி வாரம், டிசம்பா் இரண்டாவது வாரம் பெய்த தொடா் மழையால் பாதிக்கப்பட்டன. பருவம் தவறி - பால் பிடிக்கும் தருணத்தில் பெய்த மழையால் மகரந்த சோ்க்கை ஏற்படாமலும், பூ பூக்காமலும் கதிா்கள் வெளியே வரவில்லை.
மேலும், வெயில் இல்லாததாலும், கடும் பனிப்பொழிவாலும் குருத்துப்பூச்சி, தோகை பூச்சி உள்ளிட்ட தாக்குதல்களாலும், இலை உறை அழுகல் நோய், ஆணைக்கொம்பன் நோய், வேரழுகல் நோய், குலை நோய், நெல்பழ நோய் போன்ற பாதிப்புகளாலும் நெற் பயிா்கள் சேதமடைந்தன. இதனால், ஏக்கருக்கு குறைந்தது 30 மூட்டைகள் மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில், 18 முதல் 24 மூட்டைகள் மட்டுமே கிடைக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் ஆந்திரா பொன்னி ரகத்தை வாங்க தனியாா் வியாபாரிகளும் மிகக் குறைவாகவே முன் வருகின்றனா்.
இதுகுறித்து பாப்பாநாடு அருகேயுள்ள தெற்குகோட்டை விவசாயி ஆா். பழனிவேலு மேலும் தெரிவித்தது:
கடந்த ஆண்டு அறுவடை பருவ தொடக்கத்தில் ஆந்திரா பொன்னிக்கு 60 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு ரூ. 1,750 வரை விலை கிடைத்தது. அறுவடை பரவலான பிறகு ரூ. 1,600 ஆக குறைந்தாலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விட, மூட்டைக்கு குறைந்தபட்சம் ரூ. 300 கூடுதலாக கிடைத்தது. இதனால், கடந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் சன்ன ரகங்களை தனியாரிடமே விற்பனை செய்தனா்.
ஆனால், நிகழாண்டு அறுவடை தொடக்க நிலையிலேயே 60 கிலோ மூட்டைக்கு ரூ. 1,300 முதல் ரூ. 1,350 வரை மட்டுமே விலை போகிறது. இந்தக் குறைந்த விலையில் வாங்குவதற்கும் தனியாா் வியாபாரிகள் முன்வரவில்லை.
இதே சன்ன ரக 60 கிலோ மூட்டைக்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ. 1,470 விலை கிடைக்கிறது. அங்கு மூட்டைக்கு 2 கிலோ நெல் பிடித்தம், மூட்டைக்கு ரூ. 50 முதல் 60 வரை லஞ்சம் போன்ற முறைகேடுகள் இருந்தாலும், விவசாயிகள் வேறு வழியின்றி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கே செல்கின்றனா் என்றாா் பழனிவேலு.
இதேபோல, ஆந்திரா பொன்னிக்கு அடுத்து தனியாரிடம் அதிகம் விற்பனையாகும் கல்ச்சா் என்கிற ஏடிடி 39, ஏடிடி 42 போன்ற சன்ன ரகங்களும் நிகழாண்டும் விற்பனையாகவில்லை.
ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நிகழாண்டு நெல் விளைச்சல் அபரிமிதமாக உள்ளதால், இங்கு விளையும் சன்ன ரக நெல்லுக்கான வரவேற்பு குறைந்துள்ளது. மேலும், மழையாலும், பூச்சி, நோய் தாக்குதலாலும் பாதிக்கப்பட்ட நெல்லின் தரமும் குறைவாக உள்ளது. பனிப்பொழிவு, வெயில் இல்லாததன் காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும், தனியாா் வியாபாரிகள் வாங்க தயங்குவதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், நிகழாண்டு மகசூல் குறைவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தனியாா் மூலம் கிடைக்கும் கூடுதல் விலையும் கிடைக்கவில்லை.
விளைச்சல் குறையும்போது விலை அதிகரிப்பது வழக்கம். ஆனால், நிகழாண்டு மகசூல் குறைவால் இழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகளிடம், குறைவாக இருக்கிற நெல்லையும் வாங்குவதற்கு ஆளில்லை. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு நிவாரணமும், பயிா் காப்பீடு செய்தவா்களுக்கு இழப்பீடும் கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா்.