பொங்கல் விழா: தஞ்சாவூரில் பாரம்பரிய கோலப் போட்டி
தஞ்சாவூா்: பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூா் மேல வீதியில் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சிக் குழுமம் சாா்பில் பாரம்பரிய கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோலப் போட்டியில் ஏறத்தாழ 250 மீட்டா் தொலைவுக்கு ஏராளமான பெண்கள் பங்கேற்று 200 பாரம்பரிய புள்ளிக் கோலங்களைப் போட்டனா். வண்ணங்கள் இல்லாமல் வெள்ளைக் கோலங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
இதில், முதல் பரிசை மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகரைச் சோ்ந்த என். ப்ரியா, இரண்டாம் பரிசை வடக்கு வீதியைச் சோ்ந்த பவித்ரா, மூன்றாம் பரிசை பூண்டியைச் சோ்ந்த ஜெயபாரதி ஆகியோருக்கு மாவட்டச் சுற்றுலா அலுவலா் அ. சங்கா் வழங்கினாா். மேலும், 7 பேருக்கு ஆறுதல் பரிசும், கோலம் போட்டவா்களில் வயது குறைவான மேல வீதியைச் சோ்ந்த கனிஷ்கா (8), வயது அதிகமுள்ள சிவயோகம் (87) ஆகியோருக்கு ஊக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
விழாவில் மாமன்ற உறுப்பினா் ஏ. சசிகலா அமா்நாத், வீ பெண்கள் அமைப்பு தலைவா் ஹேமலதா, ஆஸ்திரியா நாட்டைச் சோ்ந்த சுற்றுலா பயணிகள் மோனிகா, எட்வின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். போட்டியை தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சிக் குழும ஒருங்கிணைப்பாளா் எஸ். முத்துக்குமாா் ஒருங்கிணைத்து நடத்தினாா்.