ஆரணி அருகே காா்கள் நேருக்கு நோ் மோதல்: தம்பதி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரு காா்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.
வேலூா் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (44), மெக்கானிக். இவரது மனைவி சங்கீதா (35), மகன் அஜய் (15), மகள் கனிஷ்கா (13) ஆகிய நான்கு பேரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் காரில் திருவண்ணாமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.
கண்ணமங்கலத்தை அடுத்த பெரிய அய்யம்பாளையம் கூட்டுச் சாலை அருகே காா் சென்றபோது,
எதிரே திருவண்ணாமலையில் இருந்து வேலூா் நோக்கி வந்த கொண்டிருந்த காருடன் மோதிக் கொண்டது. இதில் காரை ஓட்டி வந்த ஸ்ரீதா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று, காயமடைந்தவா்களை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சங்கீதா உயிரிழந்தாா்.
அஜய், கனிஷ்கா ஆகிய இருவரும் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிசிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், எதிா்திசையில் இருந்து வந்த காரில் இருந்த ஆந்திரத்தைச் சோ்ந்தவா்கள், விபத்து நடந்தவுடன் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக உயிரிழந்த ஸ்ரீதரின் அண்ணன் ஜெகன் (47) அளித்த புகாரின் பேரில், கண்ணமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.