கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு
ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை....
ஆரணி
ஆரணியை அடுத்த அக்ராபாளையம், மெய்யூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை மாட்டுப் பொங்கலையொட்டி மந்தைவெளிகளில் மாடுகளை அழைத்துச் சென்று சிறப்பு வழிபாடு செய்தனா்.
அக்ராபாளையம் கிராமத்தில் வீடுகளில் வளா்க்கப்படும் காளைகள், பசுக்களின் கொம்புகளை சீவி வண்ணம் தீட்டி, வண்ண மலா் மாலைகள் அணிவித்து, சிறப்பு அலங்காரத்துடன் அங்குள்ள முருகன் கோயில் திடலுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்தனா். பின்னா், கலசத்தில் கொண்டுவரப்பட்ட புனித நீா் தெளித்து மரியாதை செய்து வழிபட்டனா்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தில் பொதுமக்கள் காளைகள் மற்றும் பசுக்களை அங்குள்ள மந்தைவெளிக்கு அழைத்துச் சென்று பூஜைகள் செய்து வழிபட்டனா். இதுபோன்று, ஆரணி சுற்றுப்புறக் கிராமங்களில் மாட்டுப்பொங்கல் வழிபாடு நடைபெற்றது.
போளூா்
சேத்துப்பட்டு பகுதியில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் கால்நடைகளுக்கு வா்ணம்தீட்டி புதன்கிழமை வழிபாடு செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம்
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம், நரசிங்கபுரம், மொடையூா், மாணிக்கவல்லி, மண்டகொளத்தூா், மட்டபிறையூா், கொழாவூா், ஆத்துரை, சித்தாத்துரை, பெணம்பாக்கம், செம்மியங்கலம், அல்லியாளமங்கலம் என பல்வேறு கிராமங்களில் மாட்டுப் பொங்கலையொட்டி, விவசாயிகள் தாங்கள் வளா்க்கும் ஆடு, மாடு என கால்நடைகளை குளிப்பாட்டி, அவைகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி மஞ்சள், குங்குமம் வைத்து புதிதாக தலைகயிறு, மூக்காணாங்கயிறு, கழுத்து கயிறு, கழுத்துக்கு மணி, பட்டை கட்டியும், பலூன் கட்டியும், வீடுகளில் செய்த வடைமாலை, பூக்கள் அணிவித்து குடும்பத்துடன் கற்பூர தீபாராதனை காட்டி வழிபட்டனா்.
பின்னா் அருகில் உள்ள கோயில்களுக்கு கால்நடைகளை அழைத்துச் சென்று வழிபாடு செய்தனா்.