செய்திகள் :

ஆரணி, ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர்: ராமாயணத் தலம்; குழந்தை பாக்கியம் அருளும் 6 திங்கட்கிழமை வழிபாடு

post image

ராமாயணத்தோடு தொடர்புடைய பல்வேறு தலங்கள் நம் தமிழ்நாட்டில் உண்டு. தசரத மகாராஜா தனக்குப் புத்திர பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்ட்டி என்னும் யாகத்தைச் செய்தார் என்கிறது ராமாயணம்.

அந்த அற்புத நிகழ்வு நிகழ்ந்த தலம் தமிழகத்தில்தான் உள்ளது என்கின்றன ஞானநூல்கள். வாருங்கள், அந்த அற்புதத் தலம் குறித்தும், அங்கு எழுந்தருளி தசரதனுக்கு அருள்புரிந்த ஈசன் குறித்தும் தெரிந்துகொள்வோம்.

திருவண்ணாமலையில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது ஆரணி. அந்த ஊருக்குள் நுழையும்போதே ஆற்றுப் பாலத்துக்கு இடப்புறத்தில் ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலைத் தரிசிக்க இயலும்.

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் பைரவர் - நடராஜர்
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் பைரவர் - நடராஜர்

வரமான சாபம்

தசரதன் என்றால் பத்து திசைகளிலும் ரதம் செலுத்தும் வல்லமை பெற்றவன் என்று பொருள். அப்படிப்பட்ட தசரதச் சக்கரவர்த்திக்கு ஒரு குறை இருந்தது. அதுதான் புத்திரபாக்கியம் இல்லாதது. தனக்குப் பின் தன் தேசத்தை ஆள வாரிசு இல்லையே என்று வருந்தினான்.

கானகத்தில் மிருகங்களின் சத்தம் கேட்டு அதன் திசையில் குறிபார்த்து அம்புவிடும் வல்லமை படைத்தவன் தசரதன். ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது, நதி தீரத்தில் யானை நீர் பருகும் சத்தம்போல் கேட்க, தசரதன் அந்த திசையில் அம்பைச் செலுத்தினான். ஆனால் அது யானை இல்லை. ஓர் இளைஞன் குவளை ஒன்றில் நீர் நிரப்பும் சத்தம் அது.

தசரதன் எய்த அம்பு தவறாமல் அவனைத் தாக்கியதும் அந்த இடத்திலேயே அவன் அலறி விழுந்தான். அவன் பெயர் சிரவணன். அவனின் பெற்றோர் கண்பார்வை அற்றவர்கள். தசரதன் வயது முதிர்ந்த அவன் பெற்றோரிடம் சிரவணனைக் கொண்டு சேர்த்து நடந்தவற்றைக் கூறி மன்னிப்புக் கோரினான். சிரவணனின் பெற்றோர் தசரதனுக்குச் சாபமிட்டனர். "நாங்கள் எப்படி புத்திர சோகத்தால் தவிக்கிறோமோ அதேபோன்று நீயும் புத்திர சோகத்தால் உயிரை விடுவாய்" என்றனர்.

அந்தச் சாபத்தைக் கேட்டு தசரதனுக்கு அது ஒரு வரமாகத் தோன்றியது. தனக்குப் புத்திர பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்று எண்ணி மகிழ்ந்தாராம்.

ஒருநாள், தன்னுடைய குலகுருவான வசிஷ்ட மகரிஷியைச் சந்தித்த தசரதர், அவரிடம் பிள்ளை பாக்கியம் கிடைப்பதற்கான வழிபாடு குறித்தும் வேண்டினார். அதற்கு வசிஷ்டர், ‘‘கிழக்கில் இருந்து வடக்காகத் திரும்பும் நதியின் கரையில் சிவாலயம் அமைத்து, அந்தத் திருத்தலத்தில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால், சிவனருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’’ என்று அருள் புரிந்தார்.

அவர் சொன்னபடியே தசரதன் இந்தத் தேசம் முழுவதும் பயணித்து தெற்கே கமண்டல நதியானது கிழக்கில் இருந்து வடக்காகப் பாய்வதை அறிந்தான். அதன் கரையில் அழகிய சிவாலயம் ஒன்றைக் கட்டினார்.

பின்னர் கலைக்கோட்டு முனிவரின் வழிகாட்டலுடன் மிக பிரமாண்டமாக புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதன் பலனாக அவருக்குப் புத்திரபாக்கியம் ஏற்பட்டது. அதுவே ஆரணியில் அமைந்திருக்கும் புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் என்கிறது தலபுராணம்.

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில்
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில்

அருள் தரும் சந்நிதிகள்

நதிக்கரையில் வடக்குமுகமாக விநாயகரும் தெற்குமுகமாக ஆஞ்சநேயரும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். அரசமரத்தடி மேடையில் நாகர்கள் பிரதிஷ்டையையும் தரிசிக்க முடிகிறது. ராஜ கோபுரத்துக்கு நேர் எதிரில் தசரத மகாராஜாவுக்கும் தனிச் சந்நிதி உண்டு.

பல்லவர் கால கட்டட பாணியில் அமைந்திருக்க்கும் இந்த ஆலயத்தின் உள்ளே கருவறை கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மதேவர், சண்டிகேஸ்வரர், துர்கை ஆகியோரும் அழகு திருக்கோலத்தில் அருள்கிறார்கள்.

மேலும் நடராஜ மூர்த்தி, வீரபத்திரர், காளிதேவி, தேவியருடன் முருகப் பெருமான், கிருஷ்ணர், சகஸ்ரலிங்கேஸ்வரர், ரேணுகாதேவி, நவகிரகங்கள், அறுபத்துமூவர் ஆகியோரையும் இந்த ஆலயத்தில் தரிசிக்க முடிகிறது.

சனி பகவான் மற்றும் சூரிய தேவனுக்கு தனிச் சந்நிதிகள் உள்ளன. ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், லட்சதீபம், நாக சதுர்த்தி ஆகிய வைபவங்கள் வெகுகோலாகலமாகக் கொண்டாடப்படும் இக்கோயிலில் தைப்பொங்கல் திருநாளன்று நிகழும் ஆற்றுப்படி திருவிழா மிகப் பிரசித்திப்பெற்ற ஒன்று.

பிரார்த்தனைச் சிறப்பு

குழந்தைப் பேறு வேண்டுவோர், இங்கு வந்து சுவாமி-அம்பாளை வேண்டிக் கொள்வதுடன் 6 திங்கட்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும். முதல் திங்களன்று சிவ வழிபாடு முடித்து ஒரு குழந்தைக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

2-வது திங்களன்று இரண்டு குழந்தைகள், 3-வது திங்களன்று மூன்று குழந்தைகள் என்ற கணக்கில் ஒவ்வொரு திங்களன்றும் உரிய எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு அன்னதானம் செய்து, 6-வது வாரம் 6 குழந்தைகளுக்கு அன்னதானம் என்று பூர்த்தி செய்ய வேண்டும்.

அன்று கோயிலுக்கு வந்து சுவாமிக்கு தயிர் அபிஷேகம் செய்து, வெண்பொங்கல் சமர்ப்பித்து வழிபட வேண்டும். இதன் பலனாக, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

தசரதன்
தசரதன்

இங்கு அம்பிகை ஸ்ரீபெரிய நாயகி என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள். இந்த அம்பிகையை வழிபட்டால் சகல நன்மைகளும் சேரும். இத்தலத்தின் தலவிருட்சம் பவளமல்லி.

தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கும். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை ஆரணி சென்று தசரதன் வழிபட்ட இந்த ஈசனை வழிபட்டு வாருங்கள்.

பணகுடி ஸ்ரீராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்: பச்சைப்புடவை சாத்தினால் திருமணவரம் தரும் சிவகாமி அம்பிகை!

நம் தேசமெங்கும், ராமபிரான் தன் அவதாரத்தின்போது சிவபூஜை செய்த தலங்கள் ஏராளம் உள்ளன. அவ்வாறு ஸ்ரீ ராமர் வழிபட்ட சுவாமியை ராமநாதசுவாமி, ராமலிங்கசுவாமி என்று அடையாளப்படுத்தி ஆலயம் அமைத்து வழிபட்டுவருகிறார... மேலும் பார்க்க

தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடி: மாங்கல தோஷம் தீரும், சர்வ மங்கலங்களும் கைகூடும்!

மாங்கல்ய பாக்கியம் அருளும் தலங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது திருமங்கலங்குடி. இத்தலம் காவிரி வடகரைத் தலங்களில் 38-வது தலமாகும். இத்தலத்தினை அப்பர் மற்றும் சம்பந்தர் பாடியுள்ளனர். இந்த அற்பு... மேலும் பார்க்க

சபரிமலை வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு - பம்பாவில் இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கிறார்!

ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலை சென்று ஐயப்ப சுவாமியை தரிசிக்க உள்ளதாக கடந்த மே மாதம் தெரிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களால் ஜனாதிபதி சபரிமலை வருகை ரத்துச் செய்யப்... மேலும் பார்க்க

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில்: பூ வாக்குக் கேட்டுத் தொடங்கினால் சுபிட்சம் பெருகும்!

கோட்டை மாரியம்மன்கோட்டை மாரியம்மன் என்றதும் பலரின் நினைவுக்கும் வருவது திண்டுக்கல் மற்றும் சேலத்தில் இருக்கும் கோட்டை மாரியம்மன் கோயில்கள்தாம். ராணுவக் கோட்டைகளாக இருந்த இடத்தில் எழுந்தருளி இருக்கும் ... மேலும் பார்க்க

திருக்கோவிலூர் அருகே ஓர் திருவரங்கம்; ஞானம் கூடும், மன அழகும் தோற்றப்பொலிவும் கூடும்!

திருவரங்கம் என்றால் புண்ணிய நதியான காவிரிக்கு நடுவே அமைந்த தீவுப் பகுதி என்றும் அதில் திருமால் சயனத் திருக்கோலத்தில் அருள்வார் என்பதும் ஐதிகம். பஞ்சரங்கம்கர்நாடக மாநிலத்தில் அமைந்த ஸ்ரீரங்கப்பட்டினத்த... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூர்: 1,300 ஆண்டுகள் பழைமையான தலம், சனி தோஷம் தீரும் அற்புதம்!

நம் தேசம் முழுவதும் உள்ள சிவத்தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் முக்கியமானவை. அவற்றின் மகிமைகள் சொல்லில் அடங்காதவை. அப்படிப்பட்ட தலங்களைச் சென்று தரிசிக்கும்போதே நம் மனமும் ஆன்மாவும் மகிழ்வதை நம்மா... மேலும் பார்க்க