Chiyaan 63: 23 வருடங்களுக்குப் பிறகு புதுமுக இயக்குநருடன் இணையும் விக்ரம்! - வெள...
"ஆஸி பவுலர்களின் பாணி தெரியும்; இதைச் செய்தால் வெற்றி நிச்சயம்" - அரையிறுதிக்கு முன் ஷபாலி உறுதி
நடப்பு மகளிர் உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.
இன்று இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், கணுக்கால் காயம் காரணமாகத் தொடரிலிருந்து வெளியேறிய முக்கிய வீராங்கனை பிரதிகா ராவலுக்குப் பதில் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா, ஆஸ்திரேலியாவுக்கெதிராகப் பலமுறை விளையாடியிருப்பதாகவும், அவர்களின் பாணி தனக்குத் தெரியும் என்றும் கூறியிருக்கிறார்.

போட்டி நடைபெறும் நவிமும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஷபாலி வர்மா, ``பிரதிகாவுக்கு நடந்தது ஒரு விளையாட்டு வீராங்கனையாகப் பார்க்கும்போது நன்றாக இல்லை. எந்த வீராங்கனையும் இதுபோன்ற காயத்தை விரும்புவதில்லை.
அதே சமயம், அணியுடன் இணைந்ததை நல்ல வாய்ப்பாகப் பார்க்கிறேன். விளையாட வாய்ப்பு கிடைத்தால், என்னால் முடிந்ததைச் செய்வேன்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பல முறை நான் விளையாடியிருக்கிறேன். எனவே, இது எனக்குப் புதிதல்ல.
ஆஸ்திரேலிய பவுலர்களின் பாணியை நான் அறிவேன். அவர்கள் கடுமையாக எதிர்ப்பார்கள். ஆனால், அதற்கு நாங்கள் நிறையவே தயாராகிவிட்டோம்.
நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறோம். அதில்தான் கவனம் செலுத்துகிறோம். அப்படிச் செய்தால் நிச்சயமாக, நாங்கள் வெற்றி பெறுவோம்.
பேட்டிங்கில் நாங்கள் தொடக்க விக்கெட்டுகளை இழக்கவில்லை என்றால், அவர்கள் தங்கள் மீதான அழுத்தத்தை உணரத் தொடங்குவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

அதேபோல், பவுலிங்கில் நல்ல லென்த்தை கடைப்பிடிக்க முயல்வோம். பதட்டமில்லாமல் இருந்தாலே சிறப்பாகச் செயல்படுவோம்.
சின்ன, சின்ன விஷயங்களில் எங்களை நாங்களே ஆதரித்து போட்டியை எளிமையாக வைத்திருப்போம்" என்று நம்பிக்கையோடு கூறினார்.
21 வயதாகும் ஷபாலி வர்மா ஏற்கெனவே இரண்டு டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை ஒன்றில் ஆடிவிட்டதால் பெரிய தொடர் என்ற பதட்டமில்லாமல் அவர் ஆடக்கூடும்.
அதோடு, ஒருநாள் கிரிக்கெட்டில் ஓராண்டாக இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றாலும், நடப்பு உள்நாட்டு டி20 தொடரில் 56.83 ஆவரேஜில், 180 ஸ்ட்ரைக் ரேட்டில் 341 ரன்களைக் குவித்துள்ளதால் இன்றைய போட்டியில் பிளெயிங் லெவனில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அணிக்குத் தேவையான ரன்களை அடித்துக்கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.














