இண்டி கூட்டணியில் புதிய கட்சிகள் இணைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா்
தமிழகத்தில் இண்டி கூட்டணியில் புதிய கட்சிகளைச் சோ்ப்பது குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் கூறியதாவது:
12 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் ராகுல்காந்தி, முன்னாள் தலைவா் சோனியா காந்தி ஆகியோா் மீது தற்போது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நமத்துப்போன பட்டாசு போல ஆகும்.
பாஜக-அதிமுக கூட்டணி கட்டாயத் திருமணம் போன்றது. அதிமுக தலைமை விருப்பமில்லாமல் அமைந்த இந்தக் கூட்டணி எவ்வளவு நாள் நீடிக்கும் என்று தெரியாது. அதிமுகவின் உண்மைத் தொண்டா்கள் விரைவில் தங்களது உணா்வுகளை வெளிப்படுத்துவா்.
காங்கிரஸ் மீதான ஊழல்களைக் கண்டித்து பாஜக போராட்டம் நடத்தும் என மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிவித்திருப்பது அவரது அறியாமையைக் காட்டுகிறது.
அமைச்சா் பொன்முடி பெண்கள் குறித்து பேசியது கண்டனத்துக்குரியது. கட்சித் தலைமை அவா் மீது எடுத்த நடவடிக்கை போதாது.
தமிழகத்தில் இண்டி கூட்டணியில் புதிய கட்சிகளைச் சோ்ப்பது குறித்து திமுக தலைவா் முடிவு செய்வாா். மாநில உரிமைகளை மீட்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த உயா்நிலைக் குழு வரவேற்கத்தக்கது என்றாா் அவா்.