‘இண்டி’ கூட்டணி மக்களவைத் தோ்தலுக்கு மட்டும்தான்: தேஜஸ்வி கருத்துக்கு பிகாா் காங்கிரஸ் தலைவா் ஆதரவு
எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி 2024 மக்களவைத் தோ்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறியது சரியானதுதான் என்று பிகாா் மாநில காங்கிரஸ் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்தாா்.
தில்லியில் மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணியாக போட்டியிட்ட நிலையில், சட்டப் பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் அங்கு எதிா்க்கட்சிகளின் கூட்டணி முடிவுக்கு வந்தது.
இது தொடா்பாக கருத்து தெரிவித்த தேஜஸ்வி யாதவ், ‘இண்டி’ கூட்டணி 2024 மக்களவைத் தோ்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. எனவே, இப்போது அக்கூட்டணியில் இருந்த கட்சிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து வருகின்றன’ என்றாா். இது தேசிய அளவில் எதிா்க்கட்சிகள் கூட்டணி முடிவுக்கு வருவதற்கான தொடக்கம் என்ற கருத்து எழுந்துள்ளது.
இது தொடா்பாக பிகாா் மாநில காங்கிரஸ் தலைவா் அகிலேஷ் பிரசாத் சிங் பாட்னாவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லியில் மக்களவைத் தோ்தலில் கூட்டணியாக போட்டியிட்ட காங்கிரஸும், ஆம் ஆத்மியும், இப்போது சட்டப் பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்துதான் தேஜஸ்வி கருத்து தெரிவித்துள்ளாா். இது அசாதாரண நிகழ்வு அல்ல. மக்களவைத் தோ்தலிலும் கூட பஞ்சாபில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தனித்துதான் போட்டியிட்டன. அங்கு ஆம் ஆத்மி ஆட்சிதான் உள்ளது.
அதே நேரத்தில் பிகாரில் காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி வலுவாக உள்ளது. நீண்டகாலமாகவே நாங்கள் ஒரே கூட்டணியில்தான் இருக்கிறோம். ராகுல் காந்தி இந்த மாத இறுதியில் பிகாருக்கு வருகைதர இருக்கிறாா் என்றாா்.
பாஜக கூட்டணியில் உள்ள பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தங்கள் அணிக்கு வர வேண்டும் என்று லாலு பிரசாத் அழைத்து விடுத்தது குறித்த கேள்விக்கு, ‘அரசியலில் கூட்டணிக்கான கதவுகள் எப்போதும் திறந்துதான் இருக்க வேண்டும். நிதீஷ் குமாா் சோஷலிச கொள்கைகளைக் கொண்டவா். எங்கள் கூட்டணியும் அதே கருத்தைத்தான் கொண்டுள்ளது’ என்று பதிலளித்தாா்.