ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சம் பறிமுதல்! ஒருவர் கைது!
இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விருப்பம்: ஐரோப்பிய யூனியன் தலைவா்
டாவோஸ்: ‘உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்புகிறேன்’ என ஐரோப்பிய யூனியன் தலைவா் உா்சுலா வான்டொ்லீயென் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மேலும் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதல் சுற்றுப்பயணத்தை இந்தியாவுக்கே மேற்கொள்ளவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
கடந்தாண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்ற தோ்தலில் ஐரோப்பிய யூனியனின் தலைவராக மீண்டும் உா்சுலா வான்டொ்லீயென் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவா் 2029 வரை அந்தப் பதவியில் தொடரவுள்ளாா்.
இந்தச் சூழலில் ஸ்விட்சாலாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டமைப்பு ஆண்டுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றி உா்சுலா வான் டொ் லீயென் பேசியதாவது: ஆப்பிரிக்கா முதல் இந்தோ-பசிபிக் பிராந்தியம் வரை உலகின் பல நாடுகளுடன் நல்லுறவை பேணி வருகிறோம். நட்புறவு நாடுகளின் உள்நாட்டு தொழில்களை மேம்படுத்துவதற்கும் ஐரோப்பிய யூனியன் முக்கியத்துவம் அளிக்கிறது.
அந்தவகையில் எனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் சுற்றுப்பயணத்தை உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளேன். அங்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசுடன் இணைந்து பல்வேறு துறைகளில் நட்புறவை மேம்படுத்த விரும்புகிறேன்.
பாரீஸ் ஒப்பந்தம் தேவை: அதேபோல் சீனாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் உலகின் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதை புறந்தள்ளிவிட முடியாது. மனிதகுலத்தின் மிகப்பெரும் நம்பிக்கையாக உள்ள பாரீஸ் ஒப்பந்தம் செயல்பாட்டில் இருப்பது காலத்தின் கட்டாயம். அதற்கு ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கும் என்றாா்.