இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழா
கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு தொடக்க விழா, மூத்த தலைவா் நல்லகண்ணுவின் நூறாவது பிறந்தநாள் விழா, மறைந்த தலைவா் கே.டி.கே.தங்கமணி நினைவு நாள் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகள் கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன.
கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட துணைச் செயலா் ஜே.ஜேம்ஸ் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ எம்.ஆறுமுகம் கொடியேற்றி வைத்தாா். மாவட்ட பொருளாளா் தங்கவேல், கே.எம்.செல்வராஜ், வழக்குரைஞா் கே.சுப்பிரமணியன், துணைச் செயலா் குணசேகரன் ஆகியோா் கட்சியின் வரலாறு குறித்து உரையாற்றினா்.
பாப்பநாயக்கன்பாளையம் கட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த தலைவா் வி.எஸ்.சுந்தரம் கொடியேற்றி வைத்தாா். கட்டடத் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலா் என்.செல்வராஜ், மாவட்ட பொதுச் செயலா் எல்.செல்வம், மத்திய மண்டலச் செயலா் கே.ரவீந்திரன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.
இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் கோவை ரத்தினபுரி, ஆறுமுக்கு, சித்தாபுதூா், புலியகுளம், ராமநாதபுரம், உக்கடம் உள்ளிட்ட சுமாா் 100க்கும் அதிகமான இடங்களில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்ாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.