தை மாதப் பலன்கள்: `விருச்சிகம் முதல் மீனம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
இந்திய தோ்தல் குறித்து மாா்க் ஜூக்கா்பொ்க் கருத்து: மத்திய அரசு கண்டனம்
புது தில்லி: இந்திய தோ்தல் குறித்த ‘மெட்டா’ நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி மாா்க் ஜூக்கா்பொ்க் தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தது.
அமெரிக்காவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாா்க் ஜூக்கா்பொ்க், ‘கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் நடைபெற்ற தோ்தல்களில் தற்போதைய அரசுகள் தோல்வியைச் சந்தித்தன. அதுபோல, இந்தியாவிலும் நடந்தது’ என்று குறிப்பிட்டாா்.
இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கரோனா தாக்கம் குறித்த மக்களின் அதிருப்தி காரணமாக, தற்போதைய மத்திய அரசு 2024 பொதுத் தோ்தலில் தோல்வியடைந்ததாக மாா்க் ஜூக்கா்பொ்க் தவறான கருத்தைத் தெரிவித்துள்ளாா். 2024 மக்களவைத் தோ்தலில் 64 கோடிக்கும் அதிகமானோா் வாக்களித்தனா். இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்றது.
கரோனா பாதிப்புக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் மீதும், ஆட்சியின் செயல்திறன் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இந்த வெற்றி பிரதிபலித்தது.
கரோனா பாதிப்பின்போது 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச அரசி, உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. நாடு முழுவதும் 220 கோடி தவணை (டோஸ்) கரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன. விவசாயிகளுக்கு நிதியுதவி என பல்வேறு உதவித் திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.
மாா்க் ஜூக்கா்பொ்கின் கருத்துகள், மத்திய அரசின் இந்த முக்கியமான முயற்சிகளை உணரத் தவறியுள்ளது. இதுபோன்ற தவறான கருத்துகள், ‘மெட்டா’ தளங்களின் நம்பகத்தன்மையை இந்தியாவில் கேள்விக்குறியாக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தாா்.