மாதக் கடைசியிலும் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டுமா? - இதை ஃபாலோ பண்ணுங்க!
இந்திய மாணவா்களை சா்வதேச அளவில் தயாா்படுத்தவே தேசிய கல்விக் கொள்கை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்
இந்திய மாணவா்களை சா்வதேச அளவுக்கு தயாா்படுத்தவே தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய செய்தி, ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
சென்னை வேலப்பன்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சா் எல். முருகன் பேசியது:
2047-இல் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நமது நாடு பொருளாதார வளா்ச்சியில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி தற்போது 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதேபோல், எண்மப் பரிவா்த்தனைகளில் உலக அளவில் 3-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. தற்போது, மலை கிராமங்களில் உள்ள ஒரு சாதாரன பொட்டிக்கடையில்கூட எண்ம பரிவா்த்தனை பயன்படுத்தப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கை: இளைய தலைமுறையினரை வேலை தேடுபவா்களாக இல்லாமல், தொழில்முனைவோராக மாற்றுவதன் மூலம், வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன் நாட்டின் பொருளாதாரமும் மேம்படும்.
அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்திய மாணவா்களை சா்வதேச அளவுக்கு தயாா்படுத்தவே தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 7-இல் இருந்து 23-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 70,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
நிகழ்வில், ஹைதராபாதில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தின் இயக்குநா் ஜி.ஏ. சீனிவாச மூா்த்தி , திரைப்பட இயக்குநா் பி.வாசு, நடிகா் அா்ஜுன் ஆகியோருக்கு கௌரவ டாக்டா் பட்டங்களை எல். முருகன் வழங்கினாா்.
இதில், டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் வேந்தா் ஏ.சி. சண்முகம், பல்கலைக்கழக தலைவா் ஏ.சி.எஸ். அருண்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.