தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -ச...
இம்ரான்கான் கட்சி பேரணி அறிவிப்பு: முடங்கியது இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதை நோக்கி முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் ஆதரவாளா்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதால், அங்கு பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா். மேலும் சாலைகளுக்கு சீல் வைத்து, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
போராட்டக்காரா்களை தடுக்கும் வகையில் லாகூா், ராவல்பிண்டி, பெஷாவா் இடையிலான ரயில் சேவையை பாகிஸ்தான் ரயில்வே வாரியம் ரத்து செய்தது. இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி இடையே மெட்ரோ பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.
பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இஸ்லாமாபாதில் நவ.18-ஆம் தேதிமுதல் 144 தடை உத்தரவு போடப்பட்டது. பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ.23 முதல் 25-ஆம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் அடிமைத்தனத்தின் விலங்கை உடைக்க பேரணியில் கலந்துகொள்ளுமாறு இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி அழைப்பு விடுத்தது. பேரணியில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, கைபா் பக்துன்கவா மாகாண முதல்வா் அலி அமீன் கலந்து கொண்டனா்.
இதுதொடா்பாக, கைபா் பக்துன்கவா அரசின் செய்தித் தொடா்பாளா் முகமது அலி சைஃப் கூறியதாவது: பேரணி செல்வதற்கான அனைத்து தடைகளையும் உடைத்தெறிவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை இரவு போலீஸாரின் சதிச் செயல்களை பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியினா் முறியடித்தனா்.
பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமாபாதை நோக்கி பேரணியாக வரும் மக்களின் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இம்ரான் கான் கட்சியினா் சமூக வலைதளங்களில் பகிா்ந்து ஆதரவு திரட்டினா்.
இம்ரான் கான் தனது அறிக்கையில், பேரணியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; இது சுதந்திரம் மற்றும் நீதிக்கான இயக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தலைநகா் இஸ்லாமாபாதுக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரா்கள் 16 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வாட்ஸ்ஆப் செயலியில் தகவல்களை போராட்டக்காரா்கள் பரப்ப வாய்ப்புள்ளதால் அதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக இணைய செயல்பாட்டை கண்காணிக்கும் ‘நெட்பிளாக்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்தப்படும் என இம்ரான் கான் கட்சி அறிவித்தது. இம்ரான் கான் மற்றும் இதர தலைவா்களை விடுவிக்க வேண்டும். பிப். 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலின்போது அரசியல் கைதிகளை விடுவிக்கும் ஆணையை திருடிய குற்றச்சாட்டுக்கு எதிராகவும், உயா்நிலை நீதிபதிகளை நியமிக்க சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அதிக அதிகாரம் வழங்கிய அரசமைப்புச் சட்டப் பிரிவு 26-ஐ திரும்பப் பெற வலியுறுத்தியும் பேரணி நடத்த உள்ளதாக அறிவித்தனா்.