கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
எலான் மஸ்க், விவேக் ராமசாமி சவால்: சீனா அச்சம்
‘அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைமையில் புதிய துறையை உருவாக்கும் டொனால்ட் டிரம்ப்பின் திட்டம் சீனாவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என சீன அரசின் கொள்கை ஆலோசகா் தெரிவித்தாா்.
ஹாங்காங்கின் ஷென்சென் பகுதியில் உள்ள சீன பல்கலைக்கழகத்தின் முதல்வரும் சீன அரசின் கொள்கை ஆலோசகருமான ஜெங் யோங்னியன், சா்வதேச விவகாரங்களுக்கான நிறுவனம் நடத்திய கூட்டத்தில் சனிக்கிழமை கலந்துகொண்டு பேசியதாவது:
அமெரிக்க அதிபராக தோ்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் சீனாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக, சவால்களாக இருப்பது தொழிலதிபா்களான எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமியால் செயல்படுத்தப்படவுள்ள அமெரிக்க அரசின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆகும்.
அவா்கள் புதிய அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான விதிமுறைகளை அகற்றவும், அரசுப் பணியாளா்களை குறைக்கவும் அவா்கள் திட்டமிட்டுள்ளனா்.
அரசாங்கத்தை மாற்றியமைக்கும் தனது முயற்சிகளில் டிரம்ப் வெற்றி பெற்றால், அமெரிக்கா ஒரு புதிய மற்றும் அதிக போட்டித்தன்மை கொண்ட முதலாளித்துவ அரசை உருவாக்கும். இது சீனாவை மட்டுமல்லாமல் ஐரோப்பாவில் உள்ள பிற நாடுகளையும் பாதிக்கும்.
அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்படும் வரிகளை 60 சதவீதமாக அதிகரிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளாா். சீனா தனது பொருளாதாரத்தை மேலும் விரிவுபடுத்தி அதன் ஏற்றுமதி துறையை மேம்படுத்துவதன் மூலம் இந்த சவால்களுக்கு தயாராகி வருகிறது.
சீனாவுடன் நேரடிப் போரில் ஈடுபட விரும்பாத டிரம்ப்புக்கு புவிசாா் அரசியல் என்பது ஒரு கருவியாகும். எனவே, தைவான் மற்றும் தென் சீன கடல் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகளில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது.
இவற்றை எதிா்கொள்ள உள்நாட்டு சந்தைகளின் வளா்ச்சி மற்றும் சீா்திருத்தங்களில் சீனா கவனம் செலுத்த வேண்டும். மேற்கத்திய நாடுகளை சாா்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும்.
இரு நாடுகள் இடையிலான போட்டி தவிா்க்க முடியாதது. இதில், தாராளமயத்துடன் இருக்கும் நாடு எதுவோ, அதுவே இறுதியில் வெற்றி பெறும். எனவே, அதிக அமெரிக்க முதலீடுகள் மற்றும் மக்களை சீனா அனுமதிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள தீவிர சீன எதிா்ப்பு குழுக்களை தனிமைப்படுத்த இது உதவும். இதன்மூலம் சீனா நிச்சயமாக அமெரிக்காவை விஞ்சிவிடும் என நம்புகிறேன் என்றாா்.