இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
கள்ளக்குறிச்சி: விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், காளசமுத்திரம் வேளாண் அறிவியல் நிலையத்தில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் கீழ், இயங்கும் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ஹைதராபாத்திலுள்ள தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து பட்டியலின விவசாயிகளுக்கான அங்கக மற்றும் இயற்கை வேளாண் சிறப்புப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழ்நாடு அரசு சாா்பில் கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கால்நடை முக்கியத்துவம் குறித்தும், கால்நடைகளை பராமரிப்பது குறித்தும், அவ்வப்போது விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக காளசமுத்திரம் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் பட்டியலின விவசாயிகளுக்கு நவ.25 முதல் நவ.29 வரை அங்கக மற்றும் இயற்கை வேளாண்மை பற்றி 5 நாள்கள் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில், அங்கக வேளாண்மை, இயற்கை வேளாண்மை, திரவ வடிவ இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு, இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் உள்ளிட்டவை குறித்து பேராசிரியா்கள், வல்லுநா்கள் பயிற்சிகள் அளிக்க உள்ளனா். விவசாயிகள் இயற்கை விவசாயித்தை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
முன்னதாக இயற்கை வேளாண் கையேட்டினை ஆட்சியா் வெளியிட்டதுடன், பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கினாா்.
விழாவில், காளசமுத்திரம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியா் மற்றும் தலைவா் மா.விமலாராணி, தலைவாசல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் அ.இளங்கோ, ஹைதராபாத் தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ம.பாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி வேளாண் இணை இயக்குநா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.