இரட்டை இலை சின்னம் விவகாரம்: புகழேந்தியின் மனுவுக்கு தேர்தல் ஆணையம் தீர்வு காண தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
நமது நிருபர்
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக அந்தக் கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி அளித்த மனுவை விரைந்து விசாரித்து தீர்வு காணுமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அதிமுகவுக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக வழங்கப்பட்ட மனுக்கள் நிலுவையில் இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னாள் நிர்வாகி புகழேந்தி சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிதாக ஒரு மனுவை புகழேந்தியிடம் இருந்து பெற்று அதை உடனடியாகப் பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், புதிய மனு மீதும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஜானேஷ் குமார் , சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் மீது புகழேந்தி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மனோஜ் ஜெயின் அமர்வில் நடைபெற்றது.
அப்போது, புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கார்த்தி வேணு வாதிடுகையில், "தில்லி உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட மனு மீது இந்திய தேர்தல் ஆணையம் எந்த விசாரணையும் நடத்தவில்லை.
இந்த மனு கிட்டத்தட்ட 6 மாத காலமாக நிலுவையில் உள்ளது. இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் உள்ளது' என்றார்.
இதற்குப் பதிலளித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்குரைஞர் வாதிடுகையில், "வரும் டிச.24-ஆம் தேதி மனுதாரர் புகழேந்தியை அழைத்திருக்கிறோம்.
அன்றைய தினம் நிலுவையில் உள்ள அவரது மனுக்களை நிச்சயமாக கேட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஆகவே, நீதிமன்ற அவமதிப்பு என எடுத்துக்கொள்ள வேண்டாம்.
புகழேந்தி அளித்த மனுவை நிச்சயமாக விசாரிப்போம் என்கின்ற உறுதிமொழியை நீதிமன்றத்துக்கு தருகிறேன்' என்றார்.
இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகழேந்தி அளித்த மனுக்களில் நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீரித்து, வரும் 24-ஆம் தேதி உத்தரவு வழங்க வேண்டும் என கூறிய நீதிபதி மனோஜ் ஜெயின் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.