இளையராஜா இசையில் திருக்குறள் திரைப்படம்!
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் திருக்குறள் படம் உருவாகிவருகிறது.
இந்தப் படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.
ரமணா கம்யூனிகேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. காமராஜ், முதல்வர் மகாத்மா ஆகிய படங்களை இந்த நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காமராஜ் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனமெழுதிய செம்பூர்.கே.ஜெயராஜ் இந்தப் படத்துக்கும் திரைக்கதை எழுதியுள்ளார்.
திருவள்ளுவரோடு இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் நாட்டினையும் இத்திரைப்படத்தில் பதிவு செய்ய உள்ளதாகவும் மூவரசோடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, வள்ளுவநாடு என பல்வேறு சிற்றரசுகள் குறித்தும், தமிழ் அறிஞர்களுக்கிடையே நிகழ்ந்த வீரம் செறிந்த போர்க் களக்காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம் பெறுமென படக்குழு தெரிவித்திருந்தது.