செய்திகள் :

தீபத் திருநாளுக்கான சிவ துதிப்பாடல் வரிகள்

post image
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ளது, ‘போற்றித் திருஅகவல்’. இதைச் சொல்லி, ஒவ்வொரு ‘போற்றி’க்கும் மலர் தூவி, சிவபெருமானை வழிபடலாம். கோயில்களில் வலம் வரும்போதோ, கிரிவலம் வரும்போதோ, பிரதோஷ வழிபாட்டின் போதோ இந்த போற்றித் திருஅகவலைச் சொல்லி வழிபடுவது மிகவும் விசேஷம்.

இந்த அகவலை உச்சரிப்பதால், இறைவனை வழிபட்ட புண்ணியத் துடன், அவன் உறையும் உலகத்து ஜீவராசிகள் அனைத்தையும் வழிபட்ட புண்ணியமும் பெறலாம். சொல்லுங்கள்! சிவனருளால் தீவினையை வெல்லுங்கள்!

‘போற்றித் திருஅகவல்’

நான் முகன் முதலா வானவர் தொழுதெழ

ஈரடி யாலே மூவுல களந்து

நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்

போற்றி செய்கதிர் முடித்திரு நெடுமாலன்(று)

அடிமுடி யறியும் ஆதர வதனிற்

கடுமுரண் ஏன மாகிமுன் கலந்து

ஏழ்தலம் உருவ இடந்துபின் எய்த்து

ஊழி முதல்வ சயசய வென்று

வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்

வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில்

யானை முதலா எறும்பீ றாய

ஊனமில் யோனியின் உள்வினை பிழைத்தும்

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்(து)

ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்

ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்

இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்

மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்

ஈர்இரு திங்களிற் பேர்இருள் பிழைத்தும்

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும்

ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்

எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்

தக்க தசமதி தாயடு தான்படுந்

துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்

ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை

ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்

காலை மலமொடு கடும்பகற் பசிநிசி

வேலை நித்திரை யாத்திரை பிழைத்துங்

கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்

ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக்

கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்

தெய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்

தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தங்

கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்

பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்

மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்துங்

கல்வி யென்னும் பல்கடற் பிழைத்துஞ்

செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும்

நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும்

புல்வரம் பாய பலதுறை பிழைத்தும்

தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி

முனிவி லாததோர் பொருளது கருதலும்

ஆறு கோடி மாயா சத்திகள்

வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின

ஆத்த மானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்

சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள்

பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்

விரத மேபர மாகவே தியருஞ்

சரத மாகவே சாத்திரங் காட்டினர்

சமய வாதிகள் தத்தம் மதங்களில்

அமைவ தாக அரற்றி மலைந்தனர்

மிண்டிய மாயா வாத மென்னுஞ்

சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து

உலகா யதனெனு மொண்திறற் பாம்பின்

கலாபே தத்த கடுவிட மெய்தி

அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவுந்

தப்பா மேதாம் பிடித்தது சலியாத்

தழலது கண்ட மெழுகது போலத்

தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்(து)

ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்

கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும்

படியே யாகிநல் இடையறா அன்பிற்

பசுமரத் தாணி அறைந்தாற் போலக்

கசிவது பெருகிக் கடலென மறுகி

அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்

சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப

நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை

பூணது வாகக் கோணுத லின்றிச்

சதுர் இழந்(து) அறிமால் கொண்டுசாருங்

கதியது பரமா அதிசய மாக

கற்றா மனமெனக் கதறியும் பதறியும்

மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா(து)

அருபரத் தொருவன் அவனியில் வந்து

குருபரன் ஆகி அருளிய பெருமையைச்

சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்

பிறிவினை அறியா நிழலது போல

முன்பின் னாகி முனியாது அத்திசை

என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி

அன்பெனும் ஆறு கரையது புரள

நன்புலன் ஒன்றி நாதஎன்(று) அரற்றி

உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக்

கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்

கண்களி கூர நுண்டுளி யரும்பச்

சாயா அன்பனை நாடொறுந் தழைப்பவர்

தாயே யாகி வளர்த்தனை போற்றி

மெய்தரு வேதிய னாகி வினைகெடக்

கைதர வல்ல கடவுள் போற்றி

ஆடக மதுரை அரசே போற்றி

கூடல் இலங்கு குருமணி போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக் காரமு தானாய் போற்றி

மூவா நான்மறை முதல்வா போற்றி

சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி

மின்ஆர் உருவ விகிர்தா போற்றி

கல்நார் உரித்த கனியே போற்றி

காவாய் கனகக் குன்றே போற்றி

ஆவா என்றனக் கருளாய் போற்றி

படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி

இடரைக் களையும் எந்தாய் போற்றி

ஈச போற்றி இறைவ போற்றி

தேசப் பளிங்கின் திரளே போற்றி

அரைசே போற்றி அமுதே போற்றி

விரைசேர் சரண விகிர்தா போற்றி

வேதி போற்றி விமலா போற்றி

ஆதி போற்றி அறிவே போற்றி

கதியே போற்றி கனியே போற்றி

நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி

உடையாய் போற்றி உணர்வே போற்றி

கடையேன் அடிமை கண்டாய் போற்றி

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

குறியே போற்றி குணமே போற்றி

நெறியே போற்றி நினைவே போற்றி

வானோர்க் கரிய மருந்தே போற்றி

ஏனோர்க் கெளிய இறைவா போற்றி

மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை

ஆழா மேயரு ளரசே போற்றி

தோழா போற்றி துணைவா போற்றி

வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி

முத்தா போற்றி முதல்வா போற்றி

அத்தா போற்றி அரனே போற்றி

உரையுணர் விறந்த வொருவ போற்றி

விரிகட லுலகின் விளைவே போற்றி

அருமையி லெளிய அழகே போற்றி

கருமுகி லாகிய கண்ணே போற்றி

மன்னிய திருவருள் மலையே போற்றி

என்னையு மொருவ னாக்கி யிருங்கழற்

சென்னியில் வைத்த சேவக போற்றி

தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி

அழிவிலா ஆனந்த வாரி போற்றி

அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி

முழுவதும் இறந்த முதல்வா போற்றி

மானேர் நோக்கி மணாளா போற்றி

வானகத் தமரர் தாயே போற்றி

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை யன்றாய் விளைந்தாய் போற்றி

அளிபவ ருள்ளத் தமுதே போற்றி

கனவிலுந் தேவர்க்கு அரியாய் போற்றி

நனவிலும் நாயேற்(கு) அருளினை போற்றி

இடைமரு(து) உரையு மெந்தாய் போற்றி

சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீறார் திருவை யாறா போற்றி

அண்ணா மலையெம் மண்ணா போற்றி

கண்ணார் அமுதக் கடலே போற்றி

ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி

பாகம் பெண்ணுரு வானாய் போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி

குற்றா லத்தெம் கூத்தா போற்றி

கோகழி மேவிய கோவே போற்றி

ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி

பாங்கார் பழனத் தழகா போற்றி

கடம்பூர் மேவிய விடங்கா போற்றி

அடைந்தவர்க் கருளு மப்பா போற்றி

இத்தி தன்னின் கீழிரு மூவர்க்

கத்திக் கருளிய வரசே போற்றி

தென்னா டுடைய சிவனே போற்றி

எந்நாட் டவர்க்கு மிறைவா போற்றி

ஏனக் குருளைக் கருளினை போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

அருளிட வேண்டும் அம்மான் போற்றி

இருள்கெட அருளு மிறைவா போற்றி

தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி

களங்கொளக் கருத அருளாய் போற்றி

அஞ்சேல் என்றிங் கருளாய் போற்றி

நஞ்சே யமுதா நயந்தாய் போற்றி

அத்தா போற்றி ஐயா போற்றி

நித்தா போற்றி நிமலா போற்றி

பத்தா போற்றி பவனே போற்றி

பெரியாய் போற்றி பிரானே போற்றி

அரியாய் போற்றி அமலா போற்றி

மறையோர் கோல நெறியே போற்றி

முறையோ தரியேன் முதல்வா போற்றி

உறவே போற்றி உயிரே போற்றி

சிறவே போற்றி சிவமே போற்றி

மஞ்சா போற்றி மணாளா போற்றி

பஞ்சே ரடியாள் பங்கா போற்றி

அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி

இலங்கு சுடர்எம் மீசா போற்றி

கவைத்தலை மேவிய கண்ணே போற்றி

குவைப்பதி மலிந்த கோவே போற்றி

மலைநா டுடைய மன்னே போற்றி

கலையார் அரிகே சரியாய் போற்றி

திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி

பொருப்பமர் பூவணத் தரனே போற்றி

அருவமும் உருவமு மானாய் போற்றி

மருவிய கருணை மலையே போற்றி

துரியமு மிறந்த சுடரே போற்றி

தெரிவரி தாகிய தெளிவே போற்றி

தோளா முத்தச் சுடரே போற்றி

ஆளா னவர்கட் கன்பா போற்றி

ஆரா அமுதே அருளே போற்றி

பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி

தாளி அறுகின் தாராய் போற்றி

நீளளி யாகிய நிருத்தா போற்றி

சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி

சிந்தனைக் கரிய சிவமே போற்றி

மந்திர மாமலை மேயாய் போற்றி

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி

புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி

அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி

கருங்குரு விக்கன் றருளினை போற்றி

இரும்புலன் புலர இசைந்தனை போற்றி

படியுறப் பயின்ற பாவக போற்றி

அடியடு நடுஈ றானாய் போற்றி

நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற்

பரகதி பாண்டியற் கருளினை போற்றி

ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி

செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி

கழுநீர் மாலைக் கடவுள் போற்றி

தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி

பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்

குழைத்த சொன்மாலை கொண்டருள் போற்றி

புரம்பல எரித்த புராண போற்றி

பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி

போற்றி போற்றி புயங்கப் பெருமான்

போற்றி போற்றி புராண காரண

போற்றி போற்றி சயசய போற்றி

திருச்சிற்றம்பலம்

திருக்கார்த்திகை: வீட்டில் ஏற்றவேண்டிய 27 தீபங்கள் - வழிபாட்டு முறைகள்

திருக்கார்த்திகைத் திருநாளின் சிறப்பம்சம் தீபவழிபாடு. வீட்டில் மங்காத செல்வத்தையும், மங்கலத்தையும் தரவல்லது தீப வழிபாடு. தீப ஒளி நிறைந்திருக்கும் வீட்டில் தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி க... மேலும் பார்க்க

நாளை திருவண்ணாமலை தீபம்; மலையேற்றப்பட்ட கொப்பரை - முன்னேற்பாடுகள் துரிதம்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான `மகா தீபம்’ நாளை மாலை ஏற்றப்படுகிறது.இதையொட்டி, நாளை காலை 4 மணிக்கு அண்ணாமலையார் திருக்கோயிலில் சுவாமி சன்னதி எதிரே `ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ எனு... மேலும் பார்க்க

`தீபம் நிச்சயம் எரியும்; விலை மதிப்பற்ற மனித உயிர்களும் முக்கியம்’ - அமைச்சர் சேகர் பாபு சொன்னதென்ன?

திருவண்ணாமலை ஆன்மிக பூமியை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது இயற்கை சீற்றம்.கடந்த 1-12-2024 அன்று கோயில் `தீப’ மலையில் ஏற்பட்ட நிலச்சரிவுக் காரணமாக டன் கணக்கிலான பாறைகளும் உருண்டுவந்து ராஜ்குமார் என்... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: நாளை தேரோட்டம்... கற்பூரம் ஏற்ற தடை - பக்தர்கள் என்ன செய்யலாம், செய்யக்கூடாது?!

அருள்மிகு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் வெவ்வேறு அலங்கார வாக... மேலும் பார்க்க

நீங்கள் விரும்பிய வாழ்க்கையைப் பெற... திருவண்ணாமலையில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை - அரச இலை தீப வழிபாடு

நீங்கள் விரும்பிய வாழ்க்கையைப் பெற: திருவண்ணாமலையில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை! அரச இலை தீப வழிபாடு! 2024 டிசம்பர் 13 வெள்ளிக்கிழமை தீபத்திருவிழா நாளில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலய... மேலும் பார்க்க