15 நிமிடங்கள் முன்பு கூட வெற்றி சந்தேகம்: குகேஷ் ஆட்டம் பற்றி விஸ்வநாதன் ஆனந்த்
திருக்கார்த்திகை: வீட்டில் ஏற்றவேண்டிய 27 தீபங்கள் - வழிபாட்டு முறைகள்
திருக்கார்த்திகைத் திருநாளின் சிறப்பம்சம் தீபவழிபாடு. வீட்டில் மங்காத செல்வத்தையும், மங்கலத்தையும் தரவல்லது தீப வழிபாடு. தீப ஒளி நிறைந்திருக்கும் வீட்டில் தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் நீங்காது நிறைந்திருக்கும்.
சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகிட, திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்றி வழிபடவேண்டும் என்று வழிகாட்டுகின்றன ஞான நூல்கள். அவ்வகையில் தீபங்களின் வகைகள், மகிமைகள், வீட்டில் எத்தனை தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்களை விரிவாக அறிந்துகொள்வோம்.
தீபங்கள் ஏற்றி வழிபடுவது ஏன்?
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவும். பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே, தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவம்.
‘தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் எல்லா உயிர்களின் மீதும் படுகிறதோ, அப்படியே நம் மனதிலிருந்தும் அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிரகாசிக்க வேண்டும். இப்படிப்பட்ட அகவொளியோடு புற ஒளியாகிய தீபத்தை ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.’’ என்பது காஞ்சி மகா பெரியவர் வாக்கு.
கார்த்திகை நட்சத்திரத்துடன் முழுமதி சேரும் காலம் எங்கும் பனியும் குளிருமாக இருக்கும். இப்படி முழுமதியும் கார்த்திகையும் இணையும் மாதம் கார்த்திகை மாதம் ஆகும். இப்படியான குளிர் மிகுந்த கார்த்திகையின் முழுமதி நாளில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகக் காட்சியளிக்கிறார். அவர், அக்னி மண்டலத்தின் நடுவில் உமையொரு பாகனாக திருநடனம் புரிகிறார். அதுவே கார்த்திகை தீபத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
சரி, இந்தத் திருநாளில் ஆலயங்கள்தோறும், வீடுகள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். அது ஏன்? விண்ணில் விளங்கும் நட்சத்திரக் கூட்டங்களை மண்ணில் ஒளிர்வதாகக் காட்டுவதே திருக்கார்த்திகை தீபத்திருநாள். அதையொட்டியே, அன்று எண்ணற்ற தீப விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
16 செல்வங்கள் அருளும் 16 வகை ஆலய தீபங்கள்
ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப- தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று. தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள்.
புஷ்ப தீபம்- பிரம்மன்; புருஷாமிருகம்- கலைமகள்; நாகதீபம்- நாகராஜர்; கஜ தீபம்- விநாயகர்; வியாக்ர தீபம்- பராசக்தி; ஹம்ச தீபம்- பிரம்மா; வாஜ்ய தீபம்- சூரியன்; சிம்ம தீபம்- துர்கை; சூல தீபம்- மும்மூர்த்திகள்; துவஜ தீபம்- வாயு; வ்ருஷப தீபம்- ரிஷபதேவர்; பிரமா தீபம்- துர்காதேவி; குக்குட தீபம்- கந்தப்பெருமான்; கூர்ம தீபம்- மகாவிஷ்ணு; ஸ்ருக் தீபம்- அக்னி; சக்தி தீபம்- பராசக்தி.
ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறை வனுக்குக் காட்டும்போதும், அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவ துடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருக்கார்த்திகையில் ஈசனுக்கு நெய், நல்லெண்ணெய், விளக்கெண் ணெய் போன்றவற்றால் தீபமேற்றி வழிபடுதலும், சிவாலயங்களில் உள்ள தீபங்களை வணங்குதலும் அளப்பரிய நன்மைகளைத் தரும்; அனைத்து தர்மங்களையும் செய்த பலனும், கங்கை முதலான எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனும் கிடைக்கும்
வீட்டில் குறைந்தது எத்தனை தீபங்கள் ஏற்றலாம்?
திருக்கார்த்திகை தினத்தில் வீடெங்கிலும் அகல்விளக்குகள் ஏற்றி வைப்பதால், தீபலட்சுமி மகிழ்ந்து அருள்புரிவாள். குறைந்தது 27 தீபங்கள் ஏற்றிவைப்பது உத்தமம் என்கின்றன ஞானநூல்கள்.
கோலமிடப்பட்ட வாசலில்: ஐந்து விளக்குகள்
திண்ணைகளில்: நான்கு விளக்குகள்
மாடக்குழிகளில்: இரண்டு விளக்குகள்
நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்
நடைகளில்: இரண்டு விளக்குகள்
முற்றத்தில்: நான்கு விளக்குகள்
இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்; தீய சக்திகள் விலகியோடும்.
பூஜையறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்க வேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.
சமையல் அறையில்: ஒரு விளக்கு; அன்ன தோஷம் ஏற்படாது.
தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.
பின்கட்டு பகுதியில்: நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.
ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில், மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது ஆகையால், வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.
கார்த்திகை தினத்தில், தீபத்தை ஏற்றி வைத்து, ‘தீப சரஸ்வதி போற்றி, தீப லட்சுமி போற்றி, தீப துர்கா போற்றி என்று ஒவ்வொரு நாமத்தையும் மூன்று முறை சொல்லி வழிபடவேண்டும். அத்துடன், குலதெய்வத்தின் திருநாமத்தையும் மூன்று முறை சொல்லி, தீபத்தை பன்னிரண்டு முறை நமஸ்காரம் செய்து வணங்குவதால், வீட்டில் எல்லா சுபிட்சங்களும் நிறையும்.
திருமந்திரம் போற்றும் திருவிளக்கு!
ஆதிபராசக்தி ஒன்பது வடிவங்களாக அருள் பாலிப்பதாக புராணங்கள் கூறும். திருமூலர், ‘அருள் ஒளி’ எனும் தலைப்பில்...
விளக்கினை ஏற்றி விளக்கினை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவார்தாமே
- என்ற திருமந்திரப் பாடலை அருளியுள்ளார். இந்தப் பாடலைப் பாடி வழிபட, சிவ- சக்தியரின் திருவருள் ஒருங்கே கிடைக்கும்.
பொரி உருண்டை பிரசாதம்!
இந்த நாளில், வீடுகள்தோறும் நெல்பொரியுடன் வெல்லப்பாகும் தேங்காய்த் துருவலும் சேர்த்து, பொரி உருண்டை பிடித்து, ஸ்வாமி மற்றும் தீபத்துக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம்.
வெள்ளை நிறப் பொரி- விபூதி அணிந்த சிவனாரையும், தேங்காய்த் துருவல்- கொடைத் தன்மையுடன் வாழ்ந்த மகாபலிச் சக்கரவர்த்தியையும், வெல்லம்- பக்தர்களின் அளப்பரிய பக்தியையும் குறிப்ப தாகச் சொல்கின்றன, புராணங்கள்! அதாவது, அன்பர்களது ஆத்மார்த்தமான பக்தியில் மகிழ்ந்து, நெற்பொரியின் உள்ளேயும் தோன்றுவார் சிவபெருமான் என்பது ஐதீகம்!