இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்ற வேண்டும்: சாம் விஷால்
இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இசைத்துறை மேதைகளுடன் பணியாற்ற வேண்டும் என சின்ன திரை நிகழ்ச்சித் தொகுப்பாளரும் பாடகருமான சாம் விஷால் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தவர் சாம் விஷால். இவர் பாடும் மெல்லிசைப் பாடல்களுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உருவாகியுள்ளனர்.
கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்று பாடல்களைப் பாடிவரும் சாம் விஷால், சாமோடு விளையாடு என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி, தொகுப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.
சின்ன திரை பிரபலங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக உள்ளதால், ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளது.
தொகுப்பாளராக மட்டுமின்றி சில பாடல்களுக்கு மெட்டமைத்து பாடியுள்ளார். பாடல் எழுதுவதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள சாம் விஷால், தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசியதாவது, இசைத் துறை முன்னோடிகளான இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருடன் பணியாற்ற வேண்டும் என்பது எனது விருப்பம். இதேபோன்று டி. இமான், அனிருத் போன்ற இளம் தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் பாட வேண்டும்.
ஜஸ்டின் பெய்பர் என்னை மிகவும் கவர்ந்தவர். அவரை வழிகாட்டியாய்க் கொண்டுள்ளேன். ஆரம்பத்தில் எனக்கென ஒரு இசைக் குழு இல்லை. ஆனால் இப்போது நாங்கள் ஒரு சிறு குழுவாக உருவாகியுள்ளோம். அதற்கு என் சகோதரர்தான் காரணம். எனது பிறந்த நாளன்று நான் கச்சேரி செய்வதைப்போன்று பாடினேன். அன்றுதான் நான் என்னைக் கண்டடைந்தேன். பாப் பாடல்களை பலவற்றை தமிழில் கொண்டுவர வேண்டும் என்பது என் விருப்பம்.
பள்ளி, கல்லூரிகளில் பாடிக்கொண்டிருந்த எனக்கு, தற்போது மிகப்பெரிய ரசிகர் கூட்டம் கிடைத்துள்ளது. சாமோடு விளையாடு நிகழ்ச்சி மூலம் அது தொடர்ந்து கிடைக்கிறது.
நடிப்பது என்பது எனக்குள் இருக்கும் மர்மம். ஆனால் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த கலைஞனாக இருக்க வேண்டும் என்பது எனது திட்டம் எனக் குறிப்பிட்டார்.