எடையூா் சங்கேந்தியில் கூட்டுறவு வார விழா: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பங்கேற்பு
உங்களது எதிர்காலம் தெரிய வேண்டுமா? சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பாருங்கள்; கிண்டலடித்த முகமது ஷமி!
உங்களது எதிர்காலம் குறித்து தெரிந்துகொள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பாருங்கள் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி கிண்டலடித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தில் நட்சத்திர வீரர்களான ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்பட பலரும் இருப்பதால், ஏலத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. ரிஷப் பந்த்தை ஏலத்தில் எடுக்க அணிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்ளும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முகமது ஷமி மீது அணிகள் அதிக தொகையை முதலீடு செய்தால், அவர்கள் ஷமியை தொடரின் பாதியிலேயே இழக்க நேரிடும் எனவும், அதனால் அந்த அணிக்கான பந்துவீச்சு தெரிவுகள் குறையும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: ரிஷப் பந்த் ரூ.28 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்..! முன்னாள் வீரர் நம்பிக்கை!
இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: முகமது ஷமியை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க அணிகள் கண்டிப்பாக ஆர்வம் காட்டும். ஆனால், அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதும், அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவர் அதிக நாள்கள் எடுத்துக் கொள்வதும் அணிகளின் கவலையாக இருக்கும். அவர் தொடரின் பாதியிலேயே விலகும் அபாயமும் இருக்கிறது. இதனால், அவர் மீது அணிகள் மிகப் பெரிய தொகையை முதலீடு செய்தால், அது அந்த அணிக்கான தெரிவுகளை குறைக்கும். அதனால், அவருக்கான ஏலத் தொகை குறையும் அபாயம் உள்ளது என்றார்.
கிண்டலடித்த முகமது ஷமி
முகமது ஷமி குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்த கருத்துக்கு, அவர் கிண்டலாக சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: அனைவரும் பாபாஜியை புகழ்வோம். எதிர்காலத்துக்காக உங்களது ஞானத்தை கொஞ்சம் சேமித்து வையுங்கள் சஞ்சய் ஜி. உங்களில் யாருக்கேனும் உங்களது எதிர்காலம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால், சஞ்சய் ஜியை சந்தியுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: உலக விளையாட்டுகளிலே முக்கியமானதாக மாறியுள்ளது..! பிஜிடி தொடர் குறித்து ரிக்கி பாண்டிங்!
34 வயதாகும் முகமது ஷமி ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அண்மையில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஏலத்தில் ரூ.2 கோடி அடிப்படை விலையுடன் முகமது ஷமி பங்கேற்கிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதன் முதலாக ஐபிஎல் தொடரில் விளையாட அறிமுகமானது முதல் இதுவரை 110 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 127 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
அண்மையில், தக்கவைப்புத் தொகையில் உடன்பாடு இல்லாததால் ரிஷப் பந்த் தில்லி கேபிடல்ஸ் அணியால் தக்கவைக்கப்படாமல் இருக்கலாம் என சுனில் கவாஸ்கர் கூறியிருந்த நிலையில், அதற்கு ரிஷப் பந்த் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.