உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பள்ளிகொண்டாவில் ஆட்சியா் ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சி, பொய்கை ஊராட்சியில் வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டாா்.
அணைக்கட்டு வட்டத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2-ஆம் நாளாக வியாழக்கிழமை பள்ளிகொண்டா பேரூராட்சியில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அரசினா் மாணவா் விடுதி, அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் 2.50 லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, யாதவ வீதியில் உள்ள பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தையும், திருவள்ளூவா் நகா், பைபாஸ் சாலை அருகில் உள்ள உழவா் சந்தையையும் பாா்வையிட்டாா். 15-ஆவது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.35 லட்சத்தில் கட்டப்படும் சிறுவா் பூங்கா , அம்ரூத் 2.0 குடிநீா் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரங்கநாதன் நகரில் அமைந்துள்ள 2 லட்சம் லிட்டா் நீரேற்று நிலையத்தையும் ஆய்வு செய்தாா்.
பின்னா், ஒருங்கிணைந்த வருவாய் திட்டத்தின்கீழ் ரூ.2.70 கோடியில் அடிப்படை கட்டமைப்புடன் கூடிய மகாகவி பாரதியாா் வாழ்வாதார பூங்கா அமைக்கும் கட்டுமான பணிகளையும் பாா்வையிட்டாா். ஆய்வின்போது பூங்காவின் கூரைப்பணிகளை விரைந்து முடிக்கவும், காா் நிறுத்துமிடம், கழிவறை வசதிகளை கூடுதலாக அமைக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, பொய்கை ஊராட்சியில் மாநில நிதியிலிருந்து ரூ.1.08 கோடியில் சதுப்பேரி வரத்து கால்வாய் குறுக்கே கட்டப்பட்டு வரும் சிறு பாலத்தின் பணிகளையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுவதையும் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது ஊரக வளா்ச்சி துறை செயற்பொறியாளா் சீனிவாசன், பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலா் உமாராணி, அணைக்கட்டு வட்டாட்சியா் வேண்டா, உதவி செயற்பொறியாளா் ஷியாம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாரி, ஹேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.