31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம...
`மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு'- மராத்திக்காக பகையை மறந்து கூட்டணி சேரும் தாக்கரே சகோதரர்கள்?
மகாராஷ்டிரா பள்ளிகளில் 1வது வகுப்பு முதல் 5வது வகுப்பு வரை வரும் கல்வியாண்டில் இருந்து இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் மாநில அரசு கூடுதலாக ஒரு மொழி கற்றுக்கொள்வதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பி இருக்கிறது. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இப்பிரச்னை குறித்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அளித்த பேட்டியில், ''பெரிய காரணங்களுடன் ஒப்பிடும்போது, எங்களுக்கிடையேயான சச்சரவுகளும் கருத்து வேறுபாடுகளும் சிறியவை. எங்கள் தனிப்பட்ட பிரச்னைகளை விட மகாராஷ்டிரா மிக முக்கியம். மராத்தியின் அடையாளத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டத்தில் சிறிய விஷயங்கள் அற்பத்தனமானவை. ஒன்றாக வருவது அல்லது ஒன்றாக வேலை செய்வது பெரிய பிரச்னை கிடையாது. அது விருப்பத்தில் செய்யக்கூடியது.

அது என்னைப் பற்றியது மட்டுமல்ல. அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அனைத்து மராத்தி மக்களும் ஒன்றுபட்டு ஒரே முன்னணியை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்படுவதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் கிடையாது. இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரேதான் இறுதி முடிவு செய்யவேண்டும். சிறிய விஷயங்களில் நான் ஈகோவை கொண்டு வரமாட்டேன். என்னைப் பொறுத்தவரை மகாராஷ்டிராதான் பெரியது. மற்றவை இரண்டாம் பட்சம்தான். அதற்காக சிறிய பிரச்னைகளை என்னால் ஒதுக்கி வைக்க முடியும். இதற்காக உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்படத்தயாராக இருக்கிறேன். என்னுடன் இணைந்து செயல்பட அவர் (உத்தவ்) தயாராக இருக்கிறாரா என்பதுதான் இப்போது கேள்வி'' என்று குறிப்பிட்டார்.
ராஜ் தாக்கரேயின் கருத்து குறித்து உத்தவ் தாக்கரேயிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ''மகாராஷ்டிராவின் நலனுக்காக சிறிய கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க தயாராக இருக்கிறேன். உறவுகளுக்கு இடையேயான அனைத்து சண்டைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அவசியம். மகாராஷ்டிராவின் நலனை கருத்து கொண்டு கூட்டணி அமையவேண்டுமா அல்லது பா.ஜ.கவின் நலன்கள் நிறைவேற கூட்டணி அமைய வேண்டுமா என்பதை தெளிவுபடுத்தவேண்டும். மகாராஷ்டிராவிற்காகவும், மராத்திக்காகவும் சிறிய பிரச்னைகளை ஓரங்கட்ட நான் விரும்புகிறேன். மராத்தி அடையாளத்தின் நன்மைக்காக மராத்தியர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும். மக்களவை தேர்தலின் போது நாங்கள் பல்வேறு விவகாரங்களில் பா.ஜ.கவை எதிர்த்தோம். அந்நேரம் அவர்களும்(ராஜ் தாக்கரே) பா.ஜ.கவை எதிர்த்திருந்தால் மத்தியில் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.

ஒரு நாள் ஆதரவு கொடுத்துவிட்டு அடுத்த நாள் நீங்கள் எதிர்க்க முடியாது. உங்களது வசதிக்காக சமரசம் செய்து கொள்ள முடியாது. மகாராஷ்டிராவின் நலனுக்கு எதிராக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் நான் அவர்களிடம் நட்பு பாராட்டமாட்டேன். அவர்களது வீட்டிற்கு செல்ல மாட்டேன். அவர்களுடன் அமரவும் மாட்டேன்'' என்று தெரிவித்தார். சிவசேனாவில் உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் இருந்த போது அவர்களுக்குள் அதிகாரப் போட்டி ஏற்பட்டது. இதையடுத்து ராஜ் தாக்கரே சிவசேனாவில் இருந்து வெளியில் வந்து 2006ம் ஆண்டு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கினார். ராஜ் தாக்கரே சிவசேனாவில் இருந்து வெளியில் வரும் போது கட்சியில் இருந்து பிரித்து யாரையும் தன்னுடன் அழைத்து வரவில்லை. பால் தாக்கரே புகைப்படத்தைக்கூட ராஜ் தாக்கரே பயன்படுத்தவில்லை.
கடந்த மக்களவை தேர்தலில் ராஜ் தாக்கரே பா.ஜ.க கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தார். ஆனால் கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்ற ராஜ் தாக்கரே கட்சி தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் இரண்டாக உடைந்துவிட்டது. இதனால் உத்தவ் தாக்கரே நெருக்கடியில் இருக்கிறார். இந்த நேரத்தில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படவேண்டும் என்று இரு கட்சி தொண்டர்களும் விரும்புவதாக உத்தவ் தாக்கரேயின் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.