கும்பகோணம்: ``அரசுப்பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை'' - சர்ச்சையான திறப...
``உங்க பணம், 1 ரூபாய் கூட குறையாது'' - விபத்தில் சிக்கியவர் குடும்பத்தை நெகிழ வைத்த டி.எஸ்.பி!
தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (44). இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் சந்திராவுடன் வசித்து வருகிறார்.
ராஜாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தனக்குப் பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகக் கோயில்களில் பரிகார பூஜை செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு, திருவாரூர் மாவட்டம் சீதக்கமங்கலம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றிற்குப் பரிகாரம் செய்வதற்காகத் தனது ஸ்கூட்டியில் சென்றுள்ளார். பின்னர் பரிகார பூஜையை முடித்துவிட்டு, தஞ்சாவூருக்குத் திரும்பி வந்துள்ளார்.

இதையடுத்து, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கோயில்வெண்ணி அருகே சென்றபோது எதிரே வந்த சிமெண்ட் கலவை ஏற்றிச் செல்லும் லாரி ராஜா சென்ற டூவீலர் மீது மோதியது. நிலைதடுமாறிய ராஜா தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
எதேச்சையாக அப்போது அந்த வழியாகச் சென்ற நீடாமங்கலம் போலீஸார் ராஜாவை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை ஆறு கிலோமீட்டர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்ததுடன் டிரைவரைக் கைது செய்தனர்.
விபத்தில் அடிபட்ட ராஜாவிடம் ரூபாய் 2 லட்சத்து 31,000 பணம் இருந்துள்ளது. மேலும் ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக் போன்றவையும் வைத்திருந்தார்.
இதையடுத்து, உடனே நீடாமங்கலம் போலீஸார் பணத்தை கைப்பற்றியதுடன் இது குறித்து மன்னார்குடி டி.எஸ்.பி மணிவண்ணனுக்கு தகவல் கொடுக்க, பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர் போலீஸார், ராஜா குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், தன் திருமண செலவிற்காக ராஜா நிலத்தை விற்று பணம் வைத்திருந்தார்.
வங்கி கணக்கில் போடுவதற்காக பணத்தை எடுத்துச் சென்றவர், அதற்குள் கோயிலுக்கு பரிகாரம் செய்வதற்கு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, ராஜாவின் குடும்பத்தாருக்கு நீடாமங்கலம் போலீஸார் தகவல் கொடுத்தனர். பின்னர், சந்திரா மற்றும் உறவினர்கள் மன்னார்குடி டி.எஸ்.பி அலுவலகத்திற்கு வந்தனர். இதையடுத்து டி.எஸ்.பி மணிவண்ணன் உள்ளிட்ட போலீஸ் குழு 2 லட்சத்து 31,000 பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
அப்போது, மணிவண்ணன் "பணம் சரியா இருக்கானு எண்ணிக்கங்க அம்மா, ஒரு ரூபாய் கூட குறையாது" என்று கூறினார். மணிவண்ணனின் இந்த செயலால் ராஜா குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.

உடனே, கடைக்குச் சென்று சால்வை எடுத்து வந்து மணிவண்ணன் உள்ளிட்ட போலீஸ் குழுவிற்கு அணிவித்து நேர்மையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். தற்போது ராஜா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்திற்குப் பிறகு பேச்சு, மூச்சு இல்லாமல் மயங்கிக் கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்குச் சேர்த்ததுடன், அவரது பணத்தைப் பத்திரமாக ஒப்படைத்திருக்கும் டி.எஸ்.பி மணிவண்ணன் உள்ளிட்ட போலீஸார் செயலுக்கு ராயல் சல்யூட் என ராஜா குடும்பத்தினர் தெரிவித்தனர்.