செய்திகள் :

கொலு‌ - அக்ரஹாரம் முதல் ஆஸ்திரேலியா வரை! - நெகிழும் 60ஸ் பெண்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

வரலட்சுமி நோன்பு, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி என ஒரு நாள் பண்டிகைகள் எல்லாம் வந்து போவது அம்புஜம் மாமிக்கான வார்ம் அப் செஷன்ஸ் தான்.

அடுத்து வருவது... அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும், ஒன்பதே நாட்கள் என்றாலும் பெண்டை நிமிர்த்திவிடும் கொலு என்கிற 'நவராத்திரி'!

ஒரு மாதம் முன்பாகவே அம்புஜம் மாமி தோட்டக்காரர் முருகனிடம், "முருகா, இன்னைக்கு 11 மணிக்கு வந்து சித்த இந்த பொம்ம டப்பாவ பரண்லேர்ந்து இறக்கி குடுத்துட்டுப் போடா! மாமாக்கு வயசாயிடுத்து. அவரால முடியல".

"வரே பாட்டி. ஆனா, சீனிவாச ஐயா வீட்ல தோட்ட வேல கொஞ்சம் இருக்கு. முடிச்சுட்டு சாயங்காலமா வந்துடவா?".

"சரி டா. மறந்துறாத".

"என்ன கேட்டா நா எடுத்து தர மாட்டேனாடி அம்புஜம்? எதுக்காக்கும் இதுக்கு போய் முருகன கூப்புடுறாய்? அவன் காசு கேக்க போறான் பாரு".

"கேட்டா என்ன? அவன் நாம குடுத்தாலும் வாங்கிக்க மாட்டான். உங்க ஃபில்டர் காப்பி ஒன்னு மட்டும் குடுங்க மாமி போதும்பான்!உங்களுக்கு வயசாயிடுத்துன்னா. சும்மா இருங்கோ போதும். எல்லாம் நான் பாத்துக்கெறேன்".

"எப்பயும் நீதான்டீ பாத்துக்குற‌...கொஞ்சம் கூடமாட ஒத்தாசையாவாவது இருந்துண்டுருந்தேன். இப்போ பகவான் அதுக்கும் ப்ராப்தம் இல்லாம மூலேல ஒக்காத்தி வச்சுட்டார்".

"எதுக்கு இப்போ புலம்பரேள்? பேப்பர், விகடன்லாம் வந்துடுத்து. தர்றேன் படிச்சிண்ட்றுங்கோ".

கிட்டப்பா மாமாவிற்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் முட்டியில் அதீத வலி.

சென்ற ஜூலை மாதம் தான் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.

"என்னடா முருகா.‌ அஞ்சர மணி ஆயுடுத்து. சரி‌ வா. அந்த வாசல்ல இருக்க குதிரைய இழுத்துண்டு வா"

பழைய பொம்மைகளின் நிரந்தர வசிப்பிடமாம்

பரணிலிருந்து அட்டைப் பெட்டியை முருகன் இறக்க‌ ஆரம்பித்தான்.

"ஒரே தூசி மாமி. தள்ளிக்குங்க.‌ நானே இறக்கி டப்பாவ துடைச்சு வச்சுடறேன்"

"அம்புஜம், நீ தள்ளுடி. நோக்கு ஆஸ்துமா வேற இருக்கு. முருகா நீ காபிய குடுச்சுட்டு தொடடா", என்றார் மாமா.

மாமியின் டிகிரி காப்பியை ரசித்து குடித்தான் முருகன். அசந்திருந்த அவன், நிமிடமாய் இருந்த 11 பெட்டியையும் இறக்கி, துடைத்து வைத்துவிட்டு கிளம்பினான். ஸ்டாராங் காபியின் கஃபெயின் தன் வேலையைக் காட்டியிருந்தது!

அம்புஜம் மாமி மடிசாரை தூக்கிவிட்டபடி ஒரு பழைய துணியுடன் டப்பாக்கள் அருகில் கால்களை நீட்டியபடி அமர்ந்து துடைக்கலானார்.

பிள்ளையார், திருப்பதி பெருமாள், தசாவதாரம், காஞ்சி மகா பெரியவா, கிருஷ்ணர் உறியடி செட் என ஒவ்வொன்றாய் எடுக்க எடுக்க...அதென்ன? இப்போது 96 படத்தின் பொழுது சொன்னார்களே...ம்ம்ம்... 'நாஸ்டால்ஜிக்'! அதுவாக இருந்தது அம்புஜம் மாமிக்கு.

பல பொம்மைகள் 5-6 தசாப்தங்கள் பழையன.‌ அந்த பொம்மைகளில் வர்ணம் கிட்டத்தட்ட முக்கால்வாசி போயிருந்தது. சில... ஐந்தாறு வருடங்களுக்கு முன் கடைசியாய் வாங்கியது. மயிலை குளத்தங்கரையில் நவராத்திரி முடிந்ததும், பத்தாம் நாள் சென்று, கடைக்காரர்கள் நடையைக் கட்டும் நேரம் பார்த்து, ஆஃபர் ப்ரைசில் நெடுநேரம் பேரம் பேசி வாங்கியவை அவை!

கொலு பொம்மை

அம்புஜம் மாமி ஒவ்வொன்றாய் மெல்ல கவனமாக எடுத்து துடைக்க, இத்தனை ஆண்டுகள் இல்லாமல், இப்போது ஈஸி சேரில் அமர்ந்திருந்த மாமா அதை ரசித்து, நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தார்.

"ஏண்டி அம்புஜம், நோக்கு‌ ஞாபகமிருக்கா? 1990-ல நம்ம ஆத்துல கொலு எப்டி இருக்கும்?!". (எஸ்‌. எஸ்‌. ஃப்ளாஷ் பேக் தான்.‌ 90'ஸ் கொலு!)

"எங்க அம்மா இந்த பெரிய ஊஞ்சல்ல ஒக்காந்து ஆடிண்டே இருப்போ..." என்று அவர் நினைவுகூற...அம்புஜம் மாமி முணுமுணுத்து முடித்தாள் வாக்கியத்தை..."எங்களயெல்லாம் ஆட்டியும் வைப்போ!!"

அதை காதில் இனி வாங்கினாலும் எந்த ரியாக்ஷனும் கொடுக்க முடியாது மாமாவால்! ஏனென்றால் பாட்டி பரலோகம் சென்று பத்து வருடம் ஆகப்போகிறது இந்த ஆண்டு புரட்டாசி வந்தால்.

"நம்ம ஆத்துல உன்னயும் சேத்து மொத்தம் நாலு மாட்டுப்பொண்ணுங்க! கிட்டத்தட்ட 1 வயசில இருந்து 24 வயசு வரைக்கும் பேரம்பேத்திங்கன்னு வீடே நெறஞ்சு இருக்கும். திருவிழாக்கோலந்தான் தினப்படிக்கே!", என்றார் மாமா.

"இப்போ அமெரிக்காவுல இருக்க பெரிய ஓர்படி தலைல தான் மொத்த பொறுப்பும் விழும். அம்மா ஊஞ்சலாண்டின்டே ஆளாளாக்கு என்னென்ன டியூட்டின்னு சப்ஜாடா சொல்லிடுவா!" என்று‌ கூறிய மாமியின் காதில் மாமியாரின் அதிகாரத் தோரணையான குரல் இன்னும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

"எங்க அம்மா அப்போவே மேனேஜ்மண்ட் குரு டி. வர்க் டெலிகேஷன் லாம் பார்ட் ஆஃப் மேனேஜ்மண்ட் தெரியுமோ?" என்று சிலாகித்துக் கொண்டார் மாமா.

"யாருன்னா இல்லேன்னா?! பெரிய ஓர்படி பங்கஜம் அக்கா அப்போ டீம் லீட்! நானும் கிருத்திகாவும் நியூ என்ட்ரீஸ். ப்ரோபேஷன் பீரியட் ல இருந்தோம்" என்று சிரித்தாள் எம். சி. ஏ. படித்து வேலைக்குப் போய் ரிடையர் ஆகி இருந்த அம்புஜம்‌ மாமி!

"கிச்சன் சுண்டல் பொறுப்பு எனக்கு. மத்த நேர சமையல் வேல எப்பயும் போல பெரியவா ரெண்டு பேருக்கும்! கிருத்திகா தான் கடைசி மாட்டுப்பொண்ணு.‌ அதனால புதுப்பொண்ணாட்டமா நன்னா‌ மடிசார் கட்டிண்டு, தல நிறைய மல்லிப்பூ வச்சுண்டு, வர்றவாளுக்கு வெத்தல பாக்கு குங்குமம் குடுக்குறது அவ ட்யூட்டி...சாரி ப்யூட்டி... பலசரக்கு வாங்க வேண்டியது‌..."

"பர்ச்சேஸ் மேனேஜர் கடைக்குட்டி‌‌ சீனு தான்!", என்று முடித்தார் மாமா.

"குழந்தேள மேய்க்கிறது பெரியவா பொண்ணு கீது. அவா பொம்மைய தொடாம, ஒடைக்காம இருக்க பாட்டி கூடவே ஊஞ்சல் பக்கத்துல படிக்கிற மர டேபில போட்டுண்டு தன்னோட ப்ளஸ் டூ படிப்பயும் படிச்சுன்டே இருப்போ... சமர்த்து!"

"படி செட் அப், பொம்மய தொடச்சு அடுக்கிறது நானும் ரவி அண்ணாவும்‌" என்றார் மாமா கெத்தாக.

"ம்க்கும். அதுக்கு எவ்ளோ அமர்க்களம் பண்ணுவேள் ரெண்டு பேருமா சேந்துண்டு! உங்க அம்மா டைரக்ஷன்ல அப்டியே அவா சொல்றத செய்யறதுக்கு அவ்ளோ ஆர்ப்பாட்டம்! அப்போல்லாம் அத கிண்டலடிக்க வாய் வரைக்கும் வர்ற கமெண்ட்ஸ தொண்டையிலயே அடக்கிடுவேன்"

"அதான் நைட் நான் தனியா கிடச்சதும் அத எல்லாம் சொல்லி சிரிப்பியே. போதலயோ நோக்கு?!"

மாமா தொடர்ந்தார்..."நம்ம பொண்ணு மைத்துவும், ரவி அண்ணாவோட ரெட்டப் பொண்கள் பட்டு, சிட்டுவும் அந்த பட்டுப்பாவாடைய போட்டுண்டு...தாழம்பூ வச்சு‌ ஜட தச்சுண்டு...ஜிமிக்கி வளையல்-னு மின்னுவா...

'அப்பா, எப்டி‌ இருக்கு?'... ண்ணு கால்ல போட்ட தங்க கொலுசோட சேந்து சத்தம் போட்டுண்டு‌ ஓடி வருவா என்னாண்ட..."

"நல்லா சொன்னேள் போங்கோ! தினமும் ஒரு ஒரு மாதிரி ன்னா ட்ரெஸ் பண்ணுவோம் அவாளுக்கு. ஆண்டாள், மீனாட்சி, சரஸ்வதின்னு. அவாள ரெடி பண்ணி கைல நம்மாத்து வெள்ளி குங்குமச் சிமிழ குடுத்து அனுப்பறதுக்குள்ள நேக்கு போதும்ணு ஆயிடும்"

"ம்ம்ம். அலங்காரம் லாம் முடிச்சுண்டு, வாசலுக்கு வருவா. அப்போ திண்ணேல நானும் தம்பியும் ஒக்காந்தண்டுருப்போம். பட்டு கேப்போ...எப்டி எல்லாரையும் கூப்புடறுது? ன்னு. 'எங்காத்துல கொலு வெச்சுருக்கோம். வெத்தல பாக்கு வாங்கிக்க வாங்கோன்னு கூப்புடுறீ என் பட்டு' ன்னு திருஷ்டி சுத்தி என் தலைல நெட்டி முறுச்சு அனுப்புவேன்டி!"

அம்புஜம் மாமி பெருமிதத்துடன், "ரெண்டு பேரும், 'மத்தவா ஆத்துக்கு போனா அவா ஆத்து கொலுவுக்கு முன்னாடி எங்கள ஒக்காத்தி வெச்சு பாட்டு பாட சொல்றா. பாட்டு சொல்லிக்கொடுங்கோ ன்னு பகலெல்லாம்‌ பாட்டிக்கிட்ட கேட்டு கத்து வச்சுண்ட்ருப்பா!"

"அது சரி. இவா இப்டி கத பேசிண்டு கிளம்பிறதுக்குங்காட்டியும் வாசல்ல பசங்க கும்பலா வந்து, "மாமி சுண்டல், மாமி சுண்டல் னு கைல பாத்ரத்தோட வந்து நிப்பாடி", என்றார் சாப்பாட்டு ராமர் கிட்டப்பா மாமா.

'ஆனந்த யாழை மீட்டுகிறாள்...அடி நெஞ்சில் வண்ணம் கூட்டுகிறாள்...'. கிட்டப்பா மாமாவின் ரிங்டோன்...போன் அடித்தது. மகள் மைத்துவிற்கான ப்ரத்யேக ரிங்டோன் அது‌. வீடியோ கால்.

"அப்பா...எப்டி இருக்கீங்க? சாரிப்பா. லாஸ்ட் வீக் ஃபுல் டைட் ஸ்கெட்யூல். கால் பண்ணவே முடில. மூட்டு வலி பரவால்லயா?..." என்றாள் மைத்து.

திருமணத்திற்கு முன்பே பி.டி.எஸ். முடித்த கையோடு எம்.டி.எஸ். படிக்க ஆஸ்திரேலியா போனவள்.‌ பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டது. திருமணம் ஆகி பத்து வயதில் ஒரு மகள்.

"நோ ப்ராப்ளம்மா.‌ ஆல் ஓ.கே. நானும் அம்மாவும் இப்பதான் நம்ம 90'ஸ் கொலு மெமரீஸ் ல மூழ்கி ஒண்ண பத்தி பேசின்டிருந்தோம். நூறு ஆயிசு நோக்கு"

"இஸ் இட்? கோல்டன் டேஸ் தோஸ் வேர். அப்பா, இப்பயும் அதே மாதிரி இருக்காப்பா? நம்ம அக்ரஹாரமே கள கட்டுமே.‌ பத்மா மாமி ஆத்துல நவராத்திரி சனிக்கிழம அண்ணிக்கு குடுப்பாளே எள்ளுப் பொடி...ம்ம்ம் நினச்சாலே நாக்குல ஜெலம் ஊர்றதுப்பா..."

"அப்பாவுக்கேத்த பொண்ணு. சாப்பாட பத்தியே பேசுறா..." என்று நக்கலடித்துக்கொண்டே ஸ்கிரீனுக்குள்ளும் (சீனுக்குள்ளும்) நுழைந்தாள் அம்புஜம் மாமி.

"ஹாய்ய் ம்மா. என்ன பண்ற? கொலுவுக்கு என்ன ஸ்பெஷல் திஸ் இயர்?"

"இங்க என்னடி ஸ்பெஷல். எப்பவும் போல சிம்பிள் தான். உன் மன்னி தான் புதுசு புதுசா ஏதேதோ செய்வா. அலங்காரமும் செரி. கிஃப்டும் சரி"

"நீ என்னம்மா கிஃப்ட் வர்றவாளுக்கு? பார்க், மலை எல்லாம் செட் பண்றியா?"

"போடி நீ வேற‌.‌ அதெல்லாம் ஆச தீர சின்ன வயசுல பண்ணியாச்சு. இப்போ மேலவீதிக்கு போய் 2×2 ப்ளவுஸ் பிட் வாங்க யாரு போறதுன்னு நானும் அப்பாவும் குலுக்கிப் போட்டு பாத்துண்டுருக்கோம். வயசாயிடுத்து டீ. உடம்புக்கு இழுத்துண்டோம்னா யாரு பாப்பா எங்கள? உன் அண்ணாவும் மன்னியும் பெங்களூர்ல இருக்கா. நீ வெளிநாட்டுல"

"சரி சரிம்மா. பொலம்பாத‌. அதான் நீ ரொட்டேஷன்ல வெச்சுருப்பியே...18 ஆவது கைக்கு கை மாறிய ப்ளவுஸ் பிட்ஸ்! அத குடுக்க வேண்டியதுதான? இன்னும் கலம்காரிக்கே அப்டேட் ஆகல நீங்கள்லாம்!"

"குசும்புடி நோக்கு. ஆனா அதுவும்தா வச்சுண்டிருக்கேன். அதோட கூட கொஞ்சம் வாங்கணும்".

"மன்னி இந்த முற ஏதோ ஏ.ஐ. செட் அப் பாம்‌.‌ ஒரு குட்டி ரோபோ வந்து வெத்தல பாக்கு குடுக்குமாம்! ஒரு படிக்கோலம் போட்ட ஃபேரேம் தான் ரிட்டன் கிஃப்ட்டாம்"

"ஓஓஓ...செம. அவா போன வருஷமே கொலாப்ஸபில் டைப் படி வாங்கி இருந்தா. தீபாவளிக்கு வரும்போது மயிலாப்பூர் குளத்தாண்ட போய் கும்பகர்ணன் செட், விளக்கு பூஜை செட், எல்லாம் வாங்கிண்டு போனதா சொன்னா. எல்லா பழய பொம்மையையும் ரீபெயிண்ட்டும் பண்ணாளாம். லாஸ்ட் வீக் வீடியோ கால்ல உன் பேரன் எல்லாத்தயும் காமிச்சான்"

அப்பா தொடர்ந்தார், "ம்ம் எனக்கும் காமிச்சான். மரப்பாச்சி பொம்மையெல்லாம் கூட ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு இந்திய மாநில உடைகள் மாதிரி ஒரு இடத்துல குடுத்து தச்சு, செஞ்சு வாங்குறா. என்ன இருந்தாலும் நீங்கல்லாம் சின்னதுல கட்டுவேளே பார்க், பழநி மலை எல்லாம். அது மாதிரி வருமா?"

"பகல் பூரா சொந்தக்காரா ஆத்துக்கு இந்த டிராஃபிக் ல ரேப்பிடோ புக் பண்ணி போயிட்டு வர்றதுக்குள்ள போதும்னு ஆயிடுது நேக்கு" என்று அலுத்துக்கொண்டாள் அம்புஜம்.

"சரி விடும்மா. ச்சில். ச்சில். ஜாலியா செலிப்ரேட் பண்ணு. நாலு பொம்ம வச்சாலும் நானூறு பொம்ம வச்சாலும் கொலு அழகுதான்", என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே..."பாட்டி லுக் அட் அவர் கொலு", என்று ஃபோனை திசைதிருப்பி எடுத்துக்கொண்டு ஓடினாள் ஆஸ்திரேலியா பேத்தி.

"செட்டியார் டாலுக்கு முன்னாடி என்ன வெச்ருக்கேன் பாத்தியா? டிட் யூ நோட்டிஸ்? ஹீ இஸ் செல்லிங் மேக்கடேமியஸ், ஆல்மண்ட்ஸ், ஹேசல் நட்ஸ் அண்ட் வால்நட்ஸ்"

"இங்க பாருங்க ரோபாட்டிக்ஸ் லேப் மாடல் கூட பண்ணி வச்ருக்கேன். ஹைலைட் என்னன்னா, இதுல லாட் கிருஷ்ணாவதான் ரோபோவா செஞ்சிருக்கேன் க்ரேண்ட்மா. நீங்க ஆஸ்ட்ரேலியா வந்தப்போ சொன்னேளே, கிருஷ்ண புராணம் ஸ்டோரீஸ். தட் வாஸ் மை இன்ஸ்பிரேஷன். அதுல நாட்டி கிருஷ்ணா செய்ற சேட்டையெல்லாம் என் 'க்ரிஷ்' ரோபோ செய்யும்" என்று ஒவ்வொன்றாய் பேத்தி செய்து காட்ட, ஒரு மெய்நிகர்(வர்ச்சுவல்) நவராத்திரியை மனதுக்குள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர் கிட்டப்பா மாமாவும் அம்புஜம் மாமியும். ஆனந்தம் குடிகொள்ள... அலுப்பும் வலியும் மறந்தே போனது இருவருக்கும்!!

- அலமேலு இராமநாதன்,

கெருகம்பாக்கம்,

சென்னை.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

`என் கடன் பலகாரம் செய்து கிடப்பதே’ என... தீபாவளியைக் கழிக்கும் பெண்களே... கேளுங்கள்!

ஒளி, உலகெங்கும் பரவுவதைப்போல, இந்தியர்களின் உள்ளமெங்கும் மகிழ்ச்சி பரவும் பண்டிகை... தீபாவளி!புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என தீபாவளிக்கே உரித்தான கொண்டாட்டங்கள் அனைத்தும் சேரும் மையச் சரடு... உ... மேலும் பார்க்க

நன்றியுணர்வின் சக்தி : எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது? | மறந்துபோன பண்புகள் - 5

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரி டூ டிஜிட்டல் படைப்பாளர்! - இளைஞரின் உத்வேக கதை #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தெருநாய்கள் பிரச்னை உலகளாவியது- சரியான தீர்வு எது? #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பண பரிவர்த்தனை : தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால், திரும்பப் பெறுவது எப்படி?

இப்போதெல்லாம் ஆன் லைன் பேமென்ட் ஆப்களில் இருந்து பணம் அனுப்புவது அதிக மாகிவிட்டது. இப்படி பணம் அனுப்பும்போது சில நேரங்களில், தவறாக வேறொரு நபருக்கு பணம் அனுப்பி விடுவோம்; ஒரே நபருக்கே இரு முறை அனுப்பிவ... மேலும் பார்க்க

RMKV: 101 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆரெம்கேவி; 15 புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்

1924 ஆம் ஆண்டு, முதல் கடையை திருநெல்வேலியில் துவங்கியதில் ஆரெம்கேவி இருந்து, இன்று வரை நூறாண்டு காலமாக, வாடிக்கையாளர்களின் அன்பாலும், வியாபாரிகளின், நம்பிக்கையாலும், எங்களது நெசவாளர்கள் மற்றும் பணியாள... மேலும் பார்க்க