உசிலம்பட்டி: ஒச்சாண்டம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடந்த மாசிப் பெட்டி எடுப்பு திருவிழா...!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒச்சாண்டம்மன் கோயில் மிகவும் பிரபலமானது.
இந்த கோயிலில் மாசி சிவராத்திரி அன்று ஒச்சாண்டம்மன் ஆடை ஆபரணங்கள் அடங்கிய புகழ்பெற்ற மாசி பெட்டி எடுக்கும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக மூன்று நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

கடந்த 26 ஆம் தேதி அன்று தொடங்கிய சிவராத்திரி திருவிழாவில் முக்கியமான விழாவான மாசி பெட்டிகள் எடுத்துச் செல்லும் நிகழ்வு பாரம்பரிய வழக்கப்படி விமரிசையாக நடந்தது.
உசிலம்பட்டி சின்ன கருப்பசாமி கோயிலிலிருந்து ஒச்சாண்டம்மனின் ஆபரணங்கள் அடங்கிய மாசி பெட்டிகள் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. செல்கின்ற வழியில் ஏராளமான மக்கள் வணங்கினார்கள்.
அதைத்தொடர்ந்து பாப்பாபட்டியிலுள்ள ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு மாசிப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றன. இந்த மாசிப்பெட்டி எடுத்துச் செல்லும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள்.

சிவராத்திரி முடிந்தபின்பு உசிலம்பட்டி திரும்பிய மாசி பெட்டிகள், நேற்று இரவு வடகாட்டுபட்டியில் உள்ள பெட்டி வீட்டில் தங்க வைத்துவிட்டு, இன்று மீண்டும் உசிலம்பட்டியில் உள்ள சின்னகருப்ப சாமி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
உசிலம்பட்டி நகரப் பகுதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட பெட்டிகளை அய்யன் மற்றும் மாயாண்டி சுவாமி ஆடும் பூசாரிகள் ஆணி செருப்புகளை அணிந்து பெட்டிகளை அழைத்து வர, பாரம்பர்ய வழக்கப்படி உசிலம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் போலீசார்கள் மாசி பெட்டிகளுக்கு மரியாதை செய்து வரவேற்றனர்.
இந்நிகழ்வை காண உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்து பெட்டிகள் வரும் வழியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று தரிசனம் செய்தனர். இறுதியாக மாசிப் பெட்டிகள் சின்னகருப்பு சாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.