மணிப்பூரில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும்: அமித் ஷா!
Oscar Stories 2: 'இது ஜோக் இல்ல...' - ஆஸ்கர் மேடையில் தவறாக அறிவிக்கப்பட்ட வின்னர்!
97-வது ஆஸ்கர் விருதுகள் நாளை 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. உலகளவில் அங்கீகாரத்தையும் அடையாளத்தைத் தேடித் தரும் ஆஸ்கர் விருதுகளுக்கென நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கின்றன. அப்படி ஆஸ்கர் வரலாற்றில் நிகழ்ந்த சில முக்கியமான சம்பவங்கள் குறித்துத் தொடர்ந்து நம் கட்டுரைகளாக விகடன் தளத்தில் பார்க்கலாம்.
விழா மேடைகளில் குழப்பங்கள் ஏற்படுவது எப்போதும் நிகழும் சகஜமான விஷயம்தான். ஆனால், ஒருவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய விருது வேறொருவருக்குக் கிடைத்தால் அந்த மேடை எப்படியான குழப்பத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும். அதுவும் ஆஸ்கர் மேடையில் இப்படியொரு விஷயம் நிகழ்ந்தால் எப்படி இருக்கும்? இதே போன்றதொரு நிகழ்வு 2017-ம் ஆண்டு ஆஸ்கர் மேடையில் நிகழ்ந்தது.
2017-ம் ஆண்டு நிகழ்ந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை `லா லா லேன்ட்' திரைப்படத்திற்காக எம்மா ஸ்டோன் பெற்றுச் சென்றார். இந்த விருதுக்குப் பிறகு சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்குவதற்கு நடிகர்கள் வாரென் பீட்டி , ஃபேன் டூனாவேவும் மேடைக்கு வந்தார்கள். அவர்களிடம் சிறந்த திரைப்படத்திற்கான வின்னர் அட்டைக்குப் பதிலாகச் சிறந்த நடிகைக்கான வின்னர் அட்டை தவறுதலாகக் கொடுக்கப்பட்டது. வின்னர் அட்டையிலிருந்த பெயரை எண்ணிக் குழப்பமடைந்த வாரென் பீட்டி அந்த அட்டையை ஃபேன் டூனாவேவிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு அந்த அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த `லா லா லேன்ட்' திரைப்படத்திற்கு விருது என அறிவித்தார்கள்.

இதனையடுத்து கொண்டாட்டத்துடன் மேடைக்கு `லா லா லேன்ட்' திரைப்படக்குழு வந்தது. விருதைப் பெற்றுக் கொண்டு விருது குறித்து இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மேடையில் பேசத் தொடங்கினர். அதன் பிறகு விழாக்குழு வின்னர் அட்டை மாறியது குறித்து `லா லா லேன்ட்' திரைப்படக்குழுவிடம் விளக்கியிருக்கிறார்கள். அதன் பிறகு இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களே உண்மையான வின்னர் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த `மூன்லைட்' திரைப்படத்திற்கு விருதை அறிவித்து மேடைக்கு அழைத்தார்கள். இதனை நகைச்சுவையாக எண்ணி முதலில் `மூன்லைட்' படக்குழு யோசித்தது. பிறகு இந்த விஷயம் நகைச்சுவைக்காக அல்ல என விளக்கி `லா லா லேன்ட்' படக்குழு `மூன்லைட்' குழுவுக்கு விருதை வழங்கியது.
உலகமே உற்று நோக்கும் ஆஸ்கர் விருது மேடையில் இப்படியான சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறை. அப்போது இந்த விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டது. `PwC' என்ற குழுதான் இந்த ஆஸ்கர் விருது முடிவுகளுக்குப் பொறுப்பு. இப்படியான தவறுகள் நிகழ்ந்துவிடாதபடி அவர்கள் முடிவுகள் அறிவிப்பதைக் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள். அந்த தருணத்தில் இந்த குழுவிலிருந்த ஒரு நபர் செய்த சிறு குழப்பத்தினால் இந்த தவறு நிகழ்ந்திருக்கிறது. இதற்கான முழு பொறுப்பையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாக அறிவித்து இரண்டு படக்குழுவினரிடமும் மன்னிப்புக் கேட்டது இந்த குழு.

இச்சம்பவம் நிகழ்ந்த சில நாட்களுக்குப் பிறகு இப்படியான விஷயம் மீண்டும் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வதற்காக வின்னர் அட்டைகளைச் சரி பார்ப்பதில் சில வழிமுறைகளை மெருகேற்றியது. ஆஸ்கர் வரலாற்றில் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் சம்பவம் நிகழ்ந்த இதே மேடையில் மற்றுமொரு பெருமைமிகு தருணமும் அரங்கேறியது. சிறந்த துணை நடிகருக்கான விருதை `மூன்லைட்' திரைப்படத்திற்காக மகர்ஷாலா அலி வென்றார். ஆஸ்கர் விருது வெல்லும் முதல் இஸ்லாமிய நடிகர் இவர்தான்!
- கதைகள் தொடரும்...

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel