Marvel - DC: `கேப்டன் அமெரிக்கா', `சூப்பர் மேன்'... இந்தாண்டு வெளிவரவிருக்கு மார்வெல் டிசி படங்கள்!
கடந்த 2023-ம் ஆண்டு அமெரிக்காவில் ரைட்டர்ஸ் ஸ்டிரைக் (Writers Strike) நடந்தது. பல தரப்பு பரித்துரைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பிறகு அந்த வேலைநிறுத்தம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவுக்கு வந்தது. அந்த வேலை நிறுத்தத்தால் அனைத்துத் திரைப்படங்களின் வேலைகளும் பாதியில் நின்றுவிட்டது. அதனால் பல திரைப்படங்களின் ரிலீஸும் தள்ளிப்போனது.
இந்த வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பு நடந்த காமிக்கானில் (Comic Con) அறிவிக்கப்பட்ட பல படைப்புகள் 2024-ம் ஆண்டே வெளியாகியிருக்க வேண்டியது. அவையெல்லாம் இந்தாண்டில் வெளியீட்டிற்குத் தயாராகவுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் 9 மார்வெல் படைப்புகள் வெளியீட்டிற்கு வரிசை கட்டி நிற்கின்றன.
முதலாவதாக கடந்த மாதம் 27-ம் தேதி 'யுவர் ஃப்ரென்ட்லி நெய்பர்ஹூட் ஸ்பைடர்மேன் (YOUR FRIENDLY NEIGHBOURHOOD SPIDERMAN)' என்ற அனிமேஷன் தொடர் ஸ்ட்ரீமாகத் தொடங்கியிருக்கிறது. டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்தத் தொடரை, சோனி இல்லாமல் மார்வெல் மட்டுமே தனியாக தயாரித்திருத்திருக்கிறது.
அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கும், 'கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட் (CAPTAIN AMERICA: BRAVE NEW WORLD)' திரைப்படம் ரீ-ஷூட், ஸ்கிரிப்ட் மாற்றம், ரைட்டர்ஸ் வேலை நிறுத்தம் எனப் பல தடைகள் ஏற்பட்டதால் கடந்தாண்டே வெளியாக வேண்டிய இப்படம் இந்தாண்டு பிப்ரவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது மார்வெல் வைத்திருக்கும் லைன் அப்களில் முக்கியமான திரைப்படம்!
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/to4wk9xi/ROC-07986Rc5d85e-e1736554295485.webp)
பிறகு, 'டேர் டெவில்: பான் எகெய்ன்(DAREDEVIL: BORN AGAIN)' தொடர் மார்ச் மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. நெட்ஃப்ளிக்ஸில் ஏற்கெனவே வெளிவந்த டேர்டெவிலின் மூன்று சீசன்களின் தொடர்ச்சியாக வெளிவரும் இந்தத் தொடர் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் தளத்தில் வெளிவரவிருக்கிறது.
ஹீரோக்களிலும் சேராத வில்லன்களிலும் சேராத நடுநிலை கதாபாத்திரங்களான ஜான் வாக்கர், வின்டர் சோல்ஜர், எலினா, ரெட் கார்டியன் போன்ற கதாபாத்திரங்கள் ஒரு குழுவாக இணைந்திருக்கும் திரைப்படம் தான் 'தன்டர்போல்ட்ஸ் (THONDERBOLTS)'. இத்திரைப்படம் மே 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
FANTASTIC FOUR: FIRST STEPS:
ஜூன் 24-ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஐயர்ன் ஹார்ட் (IRON-HEART) என்ற வெப் சீரிஸ் வெளிவரவிருக்கிறது. தொழில்நுட்பத்தில் டோனி ஸ்டார்கிற்கு நிகராக திறமை படைத்த ரிரீ வில்லியம்ஸ் கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் குறைந்த எதிர்பார்ப்பே நிலவி வருகிறது.
ஜூலை மாதம் மார்வெல் ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான மாதம். அடுத்து வரப்போகும் பல முக்கியப் படைப்புகளுக்கும் ஆழமானதொரு அடித்தளம் அமைக்க உள்ளது 'ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் (FANTASTIC FOUR: FIRST STEPS)'. இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளது. சொல்லப்போனால், மார்வெல் நிறுவனத்தின் எதிர்காலம் இத்திரைப்படத்தின் கையில்தான் உள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/4aa13aro/The-Thing-and-HERBIE-in-Fantastic-Four-First-Steps.webp)
MARVEL ZOMBIES
ஐஸ் ஆஃப் வக்கான்டா (EYES OF WAKANDA) என்ற அனிமேட்டட் தொடர் ஆகஸ்ட் 6-ம் தேதி வெளிவர உள்ளது. மார்வெல் அனிமேஷன் பேனலின் கீழ் வரும் இந்தத் தொடர் பிளாக் பாந்தரின் ஸ்பின் ஆஃப் தொடர் ஆகும்.
இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 'மார்வெல் ஜாம்பிஸ் (MARVEL ZOMBIES)' என்ற அனிமேஷன் தொடர் வெளிவர உள்ளது. மார்வெல் அனிமேஷன் பேனலின் கீழ் வரும் இந்தத் தொடர் `வாட் இஃப்' முதல் சீசனில் வந்த ஜாம்பி எபிசோடின் ஸ்பின் ஆஃப் தொடர் ஆகும்.
இந்த ஆண்டினை 'வொன்டர் மேன் (WONDER MAN) 'என்ற ஒரு புதிய கதாபாத்திரத்தைக் கொண்ட தொடருடன் நிறைவு செய்கிறது மார்வெல். ஆரம்பக் கட்ட பணிகளில் உள்ள இந்தத் தொடர் டிசம்பரில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் ஆழம் பார்த்து பொறுமையாகவே களம் காண்கிறது டி.சி. ரீபூட்டில் புதுமையாகக் களமிறங்கும் டி.சி நிறுவனம், இந்தாண்டு சூப்பர்மேன் (SUPERMAN) திரைப்படத்தை மட்டுமே வெளியிடுகிறது. ஜூலை 11 -ம் தேதி உலகெங்கும் வெளியாகும் இந்தத் திரைப்படம்தான் டி.சி யுனிவெர்சை (DC UNIVERSE) உருவாக்குவதற்கான முதல் அடியை எடுத்து வைக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/ka4ckey7/Screenshot20241219at120935-PMH-2024.webp)
இதைத் தவிர வேறு எந்த பெரிய ப்ராஜெக்ட்டும் டி.சியிடம் இருந்து இந்தாண்டு எதிர்பார்ப்பதற்கு இல்லை. இந்தத் திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்தே அடுத்தடுத்த நகர்வுகளுக்கு தயாராகவிருக்கிறது டி.சி.
மொத்தத்தில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு படைப்பு வெளிவர இருப்பதால் இந்தாண்டு காமிக் ரசிகர்கள் கொண்டாடும் ஆண்டாக மாறி உள்ளது!
VIKATAN PLAY:
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play