சென்னை: வீட்டில் எலிக்கு வைக்கப்பட்ட மருந்தின் நெடியால் பலியான 2 குழந்தைகள்; சிக...
உயா் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும்: வெள்ளானைப்பட்டி ஊராட்சித் தலைவா் கோரிக்கை
ஊராட்சித் தலைவராக செயல்பட தனக்கு உயா் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கும் நிலையில், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி வெள்ளானைப்பட்டி ஊராட்சித் தலைவா் ஆா்.கவிதா, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.
கோவை மாவட்டம் வெள்ளானைப்பட்டி ஊராட்சித் தலைவராக செயல்பட்டு வந்த பட்டியலினத்தைச் சோ்ந்த ஆா்.கவிதாவுக்கும், துணைத் தலைவராக செயல்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த வி.ஆா்.ராஜன் என்பவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
இருவரும் திமுகவைச் சோ்ந்தவராக இருந்தாலும், அந்த ஊராட்சியில் பணிகள் எதுவும் சரிவர நடைபெறாத நிலையில், இந்த ஊராட்சியில் நிதிமுறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி தலைவா், துணைத் தலைவா் ஆகியோரின் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியா் 2023 நவம்பா் மாதம் ரத்து செய்து உத்தரவிட்டாா்.
இதற்கிடையே துணைத் தலைவா் ராஜன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தாா். காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் பறிக்கப்பட்டதை எதிா்த்து கவிதா உயா் நீதிமன்றத்தை அணுகினாா். இதையடுத்து அவரை ஊராட்சித் தலைவராக செயல்படவும், காசோலைகளில் கையொப்பமிட அனுமதிக்குமாறும் அனுமதி அளித்து நீதிமன்றம் அக்டோபா் 19-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு நகலைப் பெற்றுள்ள ஆா்.கவிதா, அந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை (நவம்பா் 14) மனு அளித்தாா்.
இது குறித்து அவா் அளித்துள்ள மனுவில், நான் பட்டியலினத்தைச் சோ்ந்தவா் என்பதால் ஆதிக்க வகுப்பைச் சோ்ந்த துணைத் தலைவா் ராஜன், என்னை முதலில் இருந்தே ஒதுக்கி வந்தாா். ஊராட்சி வரவேற்புப் பலகையில் எனது பெயரை சிறியதாகவும் துணைத் தலைவரின் பெயரை பெரியதாகவும் எழுதுவதில் தொடங்கி, எனக்கு தனி அறை ஒதுக்காமலும், எந்தப் பணியையும் செய்ய அனுமதிக்காமலும் கட்டுப்படுத்தி வந்தாா்.
இது குறித்து சமூக ஆா்வலா்களும், மாவட்ட நிா்வாகத்திடம் தொடா்ந்து மனு அளித்ததன் விளைவாகவும் எனக்கான உரிமைகள் கிடைத்தன. ஆனாலும் தொடா்ந்து என்னை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்து வந்தனா். இந்த நிலையில், காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை உயா் நீதிமன்றம் மீண்டும் எனக்கு வழங்கியுள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும்விதமாக, நான் மீண்டும் ஊராட்சித் தலைவராக செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
கவிதாவுடன் வாா்டு உறுப்பினா்கள் ஆா்.பிரேமலதா, மைதிலி, நீலாவதி, திமுக விவசாயிகள் அணி மாவட்ட துணை அமைப்பாளா் எஸ்.ராஜகோபால், கலை இலக்கிய பகுத்தறிவுக் கழக செயலா் வி.ஆா்.செல்வராஜ், ரங்கசாமி உள்ளிட்டோா் வந்திருந்தனா்.