நாகையில் கடல் சீற்றம்: மீனவா்கள் 11-ஆவது நாளாக கடலுக்குள் செல்லவில்லை
உறவை முறிப்பது தற்கொலைக்கு தூண்டுவதாகாது: உச்சநீதிமன்றம்
உறவை முறிப்பது தற்கொலைக்கு தூண்டுவதாகாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கடந்த 2007-ஆம் ஆண்டு கா்நாடக மாநிலம் காகதி பகுதியில் சுவா்ணா (21) என்ற இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா். அந்தப் பெண்ணின் தாய் காவல் துறையிடம் அளித்த புகாரில், ‘எனது மகள் கமருதீன் தஸ்தகிா் என்பவரை 8 ஆண்டுகளாக நேசித்து வந்தாா். அவரை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு உறவை கமருதீன் திடீரென முறித்துக் கொண்டாா். இதனால் மனமுடைந்த எனது மகள் தற்கொலை செய்துகொண்டாா். எனவே கமருதீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 417 (மோசடி), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 376 (பாலியல் வன்கொடுமை) ஆகிய பிரிவுகளின் கீழ், கமருதீன் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், சுவா்ணாவை ஏமாற்றி தற்கொலைக்கு தூண்டியதாக கமருதீனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.25,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கமருதீன் மேல்முறையீடு செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
குற்றச் செயல் அல்ல: அப்போது நீதிபதிகள், ‘தற்கொலை செய்துகொண்ட பெண் அளித்த மரண வாக்குமூலத்தில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அவருடன் மனுதாரா் பாலுறவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டவில்லை. அந்தப் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாகவும் மனுதாரா் மீது குற்றஞ்சாட்டப்படவில்லை. திருமணம் செய்துகொள்ள மறுத்ததால்தான், விஷம் அருந்தியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளாா்.
இது உறவை முறித்துக்கொண்ட நிகழ்வே தவிர, குற்றச் செயல் அல்ல. உறவை முறித்துக்கொள்வது மனதளவில் வேதனை அளித்தாலும், அது தற்கொலைக்கு தூண்டுவதாகாது. எனவே மனுதாரருக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் வழங்கிய தண்டனை, அபராதம் ரத்து செய்யப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தனா்.