உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல்! இந்தியா சறுக்கல்!
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்ட நாடுகளின் பட்டியலை ஹென்லே பாஸ்போர்ட் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஒரு நாட்டின் குடிமக்கள் வைத்திருக்கும் பாஸ்போர்ட்டின் மூலம் எத்தனை சர்வதேச நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ள முடியும் என்பதை வைத்து பாஸ்போர்ட்டுகளின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. இது சாதாரண குடிமக்கள் சர்வேதேச அளவில் பயணம் செய்வதை எளிதாகுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஹென்லே பாஸ்போர்ட் இண்டெக்ஸ் எனும் நிறுவனம் தற்போது 2025ஆம் ஆண்டில் உலக நாடுகளின் பாஸ்போர்டுகளின் மதிப்பு பட்டியல் வெளியிட்டுள்ளது.
இதில், முதல் இடத்தில் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் பாஸ்போர்ட் பிடித்துள்ளது. அந்த பாஸ்போர்ட்டை கொண்டு சுமார் 195 உலக நாடுகளுக்கு விசா இல்லாமல் சிங்கப்பூரின் குடிமக்களால் பயணம் செய்யக்கூடிய சிறப்பை அது பெற்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யும் அளவிற்கு ஜப்பான் நாட்டு பாஸ்போர்டின் மதிப்பு உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க:உ.பி.,யில் 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 3 பேர் காயம்
அந்த பட்டியலின் முதல் 10 இடங்களில் அடுத்தடுத்து பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள் இடம் பிடித்திருக்கும் நிலையில், சென்ற ஆண்டு 80 வது இடத்தில் இருந்த இந்திய பாஸ்போர்ட் தற்போது 85 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு 90 வது இடத்தில் இருந்த இந்திய பாஸ்போர்டின் மதிப்பு 2024 இல் 80வது இடத்திற்கு முன்னேறியிருந்தது. இந்நிலையில், தற்போது 85 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் குடிமக்களின் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெறும் 26 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி பயணம் செய்யும் அளவிற்கு அந்த பட்டியலின் கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் நாட்டின் பாஸ்போர்ட் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.