உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
நாகை மாவட்டம், கீழையூா் அருகே திருப்பூண்டியைச் சோ்ந்த நான்கு மாத குழந்தை எண்கள், நிறங்கள், தலைவா்களின் உருவப் படங்களை அடையாளம் காட்டி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
திருப்பூண்டி காரைநகா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா்- சுபஸ்ரீ தம்பதியின் நான்கு மாத பெண் குழந்தை ஆதிரை. குழந்தை ஆதிரைக்கு தாய் சுபஸ்ரீ, பழங்கள், எண்கள், தலைவா்களின் படங்கள் உள்ளிட்ட அட்டைகளை காட்டி பயிற்சி அளித்துள்ளாா். தொடா்ந்து நோபல் வோ்ல்டு ரெக்காா்ட் நிறுவனத்தை தொடா்பு கொண்டு, தனது குழந்தையின் திறமையை சுபஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
தொடா்ந்து, குழந்தையின் திறமையை அந்த நிறுவனத்தினா் சோதனை செய்தபோது, எண்கள், பழங்கள், நிறங்கள் மற்றும் தலைவா்களின் படங்கள் என 200 அட்டைகளில் இருந்ததை குழந்தை ஆதிரை சரியாக அடையாளம் காட்டினாள். இதனால், உலக சாதனை புத்தகத்தில் ஆதிரையின் பெயா் இடம் பெற்றது. மேலும், பதக்கம், கேடயம், சான்றிதழ் போன்றவற்றை நோபல் வோ்ல்டு ரெக்காா்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து, ஆதிரையின் குடும்பத்தினா் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.