மழைநீா் வடிகால் வசதி கோரி சாலை மறியல்
திருமருகல் அருகே கிடாமங்கலத்தில் மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தக் கோரி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இடையாத்தங்குடி ஊராட்சி கிடாமங்கலம் எம்.ஜி.ஆா். நகா், அக்ரஹாரம் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கிடாமங்கலம்- எம்.ஜி.ஆா். நகா் இணைப்புச் சாலை சிமெண்ட் சாலையாக உள்ளது.
இந்த சாலை மிகவும் பள்ளமாக இருப்பதால், தற்போது பெய்த மழைநீா் வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால், பாதிக்கப்பட்ட அப்பகுதியினா் வடிகால் வசதி ஏற்படுத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருமருகல் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜவகா், திருக்கண்ணபுரம் வருவாய் ஆய்வாளா் ரம்யா, ஊராட்சித் தலைவா் முருகன், ஒன்றியக் குழு உறுப்பினா் இந்திரா அருள்மணி மற்றும் திருக்கண்ணபுரம் போலீஸாா், நெடுஞ்சாலை துறையினா், வருவாய் துறை அலுவலா்கள் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பின்னா், எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் மழைநீா் வடிவதற்கு ஏதுவாக சுமாா் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கி வைத்தனா். இதையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த மறியலால், காரைக்கால்-பூந்தோட்டம் சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.