உலக ஜூனியா் ஸ்குவாஷ்: அனாஹத் சிங்குக்கு வெண்கலம்
எகிப்தில் நடைபெறும் உலக ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனாஹத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றாா். இப்போட்டியில், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.
மகளிா் ஒற்றையா் அரையிறுதியில் அவா், 6-11, 12-14, 10-12 என்ற கணக்கில், உள்நாட்டு வீராங்கனை நாடியென் எல்ஹமாமியிடம் தோல்வியைத் தழுவினாா். முதல் கேமை எளிதாக இழந்த அனாஹத் சிங், அடுத்த இரு கேம்களில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தாலும், ஒரு கட்டத்துக்குப் பிறகு பின்னடைவை சந்தித்தாா். இறுதியில், போராடித் தோற்றாா்.
உலக சாம்பியன்ஷிப்பில் அரையிறுதி வரை வருவோருக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கும் என்பதன் அடிப்படையில், அனாஹத் சிங்குக்கும் பதக்கம் கிடைத்தது. முன்னதாக இந்தப் போட்டியில் கடந்த 2010-இல் தீபிகா பலிக்கல் இதேபோல் அரையிறுதி வரை வந்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்தாா். அதன் பிறகு, இந்த 15 ஆண்டுகளில் இந்தக் கட்டத்துக்கு வந்து இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் அனாஹத் சிங் ஆவாா்.
இப்போட்டியில், கடந்த 2005-இல் ஜோஷ்னா சின்னப்பா இறுதிச்சுற்று வரை வந்ததே இந்தியா் ஒருவரின் அதிகபட்சமாகும்.