புயல் எச்சரிக்கை எதிரொலி: நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து
புயல் எச்சரிக்கை, கடல் சீற்றம் காரணமாக, நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு தினசரி பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை நாகை துறைமுகத்தில் இருந்து பயணிகளுடன், இலங்கை காங்கேசன்துறை செல்லும் இந்த கப்பல், அங்கு பிற்பகலில் நாகை வரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு, அன்றைய தினம் மாலையே மீண்டும் நாகை துறைமுகத்தை வந்தடையும். வார நாள்களில் செவ்வாய்க்கிழமை தவிர இதர அனைத்து நாள்களிலும் இக்கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், கடல் சீற்றத்துடன் இருப்பதாலும், புயல் எச்சரிக்கை காரணமாகவும், நாகை துறைமுகத்தில் இருந்து இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சனிக்கிழமை கப்பல் இயக்கப்படவில்லை.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியது:
புயல் எச்சரிக்கை, கடல் சீற்றம் காரணமாக பயணிகளின் பாதுகாப்பு கருதி கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலில் இயல்புநிலை திரும்பியதும் மீண்டும் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என்றனா்.